Motivation - ஊக்கம்
***********************

இந்த ஒரு வார்த்தை இல்லை என்றால், முன்னேற்றம் என்ற ஒன்று நம் வாழ்க்கையில் வரவே வராது.

பெருந்தலைவர் காமராஜரின் உடை, அர்பணிப்பு, அவர் 'சேர்த்து வைத்த சொத்து' தான் எனக்கு ஊக்கம்.அவரை போல் வாழ வேண்டும். அவர் தான் எனக்கு போட்டியாளர்...

"இந்த உலக வாழ்க்கை வெறும் 60,70 வருஷம் தான்.நீண்ட தூர பயணத்தில், சில நிமிடம் சிற்றுண்டியில் பேருந்து நிற்பது போன்றது இந்த உலக வாழ்க்கை. தற்காலிகமானது. இறந்த பின் வேறு உலகத்தில் ஆயிரக்கணக்கான வருஷம் நிலையான வாழ்க்கை இருக்கிறது.தப்பு செய்யாம வாழ்ந்து , கஷ்டபடுறவங்களுக்கு உதவியும் செஞ்சா,அந்த சந்தோஷ, அமைதி உலகத்தில் இடம் கிடைக்கும்.காமராஜர் போன்றவர்கள், அந்த உலகில் சந்தோஷமாக வாழ்கிறார்கள்.இறந்த பின்,நானும் என் மனைவியும், காமராஜர் வாழும் அந்த உலகில் ஆயிரம் வருஷம் சந்தோஷமாக வாழ வேண்டும்.வாழ்வோம்" - இது தான் எனக்கு உள்ள ஒரே ஒரு (மூட) நம்பிக்கை. பைத்திக்காரத்தனமான இந்த நம்பிக்கை தான் எனக்கு ஊக்கமா இருந்தது, இருக்கிறது.

நான் பணி செய்வது 24*7 ஆரம்ப சுகாதார நிலையம். ஒரு நாளைக்கு 1-3 பிரசவம் நடக்கும்.வெளி நோயாளிகளுக்கு வைத்தியம் பார்க்கிறோம். 24 மணி நேரமும் அவசர சிகிச்சை செய்யுறோம்.தையல் போடுவேன்,மருந்து எழுதி கொடுப்பேன்,பிரசவம் பார்ப்பேன்.நேரம் கிடைக்கும் பொது facebookல் கிறுக்குவேன்.சந்தோஷமான வேலை.நான் இருக்குற இடத்தில், தமிழ் தொலைகாட்சியோ, செய்தித்தாளோ கிடையாது. அதனால் வேலை,facebook என சுகமா போய்கிட்டு இருந்தது.

ஆனா, கடந்த ஒரு வாரமா,வேலை பளு அதிகமாகிடுச்சு.காரணம் இங்க மலேரியா நோய் வேகமா பரவ ஆரம்பிச்சுடுச்சு. மழை பெய்ததால், கிராமங்களில் தண்ணீர் தேங்கி,கொசு பெருகி இருக்கு. நாள் முழுதும் நோயாளிக வருவாங்க, எப்பொழுதும் உள் நோயாளிகள் இருந்துகிட்டே இருப்பாங்க. நான் ஒரே ஒரு மருத்துவர்.சரியா தூங்கல, சாப்பிடல. காலை சாப்பாட மதியம் தான் சாப்பிட முடியுது.

நேத்து வேலை முடிஞ்சு,அசதியா இரவு 2 மணிக்கு அறைக்கு வந்தேன் (ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே எனக்கு தனி அறை இருக்கு).facebook திறந்து பார்த்தேன். எனக்கே தெரியாம தூங்கிட்டேன்.கதவ வேகமா தட்டுனாங்க.அடுத்த பிரசவம்.அடுத்து அதிக காய்ச்சலோட ஒரு மலேரியா நோயாளி.காலை 6 மணிக்கு படுத்து, 8 மணிக்கு எழுந்து, கிடைச்ச 1 மணி நேரத்துல ஒரு facebook போஸ்ட் போட்டேன்.திரும்பவும் 9 மணிக்கு வெளிநோயாளிகள், அவசர சிகிச்சை, உள் நோயாளிகள், பிரசவ வலியோட வரும் பெண்கள் , செவிலியர் மாணவிகளுக்கு பாடம் வேற எடுக்கணும் .
...ச்ச என்ன வாழ்க்க டா இதுனு சோர்ந்து போயிருந்தேன்..

இன்று மாலை ஒரு கஷ்டமான பிரசவம்( prolonged second stage labor)2 மணி நேரம் போராடியும் குழந்தை பிறக்கலை.மகப்பேறு மருத்துவரிடம் செல்போனில் பேசினேன்.பெரிய ஆஸ்பத்திரிக்கு போக 45 நிமிடம் ஆகும்.அது வரை என்ன செய்வது ?  
"வேற வழியே இல்லை பாலாஜி, நீ இருக்குற கிராமத்து ஆஸ்பத்திரியிலேயே எப்படியாவது, முயற்சி பண்ணு"னு சொன்னாங்க.குழந்தை வெளியே வரவில்லை.பிரசவத்திற்கு வந்த பெண்ணும் வலியால் களைச்சு போயிட்டார்.நாங்களும் சோர்ந்து போயிட்டோம்.சரியா தூங்காததால் எனக்கு அதிக களைப்பு...

(வழக்கமா, இரவு நேர பிரசவத்திற்கு, மீனா'ஜி' என்பவரை அழைப்போம்.அவரும் சுகாதார ஊழியர் (ANM).என்னை விட வயதில் மூத்தவர்.வட இந்தியாவில் மரியாதையா 'ஜி' போட்டு அழைப்பது வழக்கம்.பிரசவம் பார்ப்பதில் மிகுந்த அனுபவம்.வேற கிராமத்தில் பணி செய்கிறார்.ஆனால் எங்க ஆஸ்பத்திரியில் அவர் விடுதி உள்ளது.நான் இது வரை 300 பிரசவம் பார்த்திருப்பேன்.ஒவ்வொரு முறையும் மனசுக்குள்ள ஒரு பயம் இருக்கும்.எப்போ வேணாலும் எது வேணாலும் நடக்கலாம்.ஆனா மீனாஜி என் கூட இருந்தா, பிரசவம் பார்ப்பதில் எனக்கு கூடுதல் கூடுதல் பலம்.ராத்திரி எத்தனை மணியானாலும், பிரசவம் பார்க்க வருவார்.)

இன்றைய சிக்கலான பிரசவத்திற்கும், அவரை கூப்பிடலாம்னு சொன்னார்கள்.ஆனா அவங்களுக்கு தான் மலேரியா தாக்கி இருக்கே ? என்ன செய்றது? இன்று காலை, நான் தான் அவங்களுக்கு மலேரியானு கண்டுபிடிச்சு, மருந்து கொடுத்து, 'ஓய்வு எடுங்க, வேலை செய்யாதீங்க'னு அறிவுரை சொல்லி இருந்தேன்.

ரொம்ப நேரம் இப்படியே வெளிய வராம இருந்தா, கருப்பையிலேயே குழந்தை இறந்திடும். இப்போ என்னடா பண்றதுனு குழப்பம்...
ஆச்சரியமா, நாங்க அழைக்காமலேயே மீனாஜி வந்து விட்டார்.
வந்த உடனே, எனக்கு புது உற்சாகம்.எல்லாரும் முயற்சி செஞ்சு, பெரிய போராட்டத்திற்கு பிறகு குழந்தை நல்லபடியா பிறந்தது.(கழுத்தை சுற்றி இருந்த தொப்புள் கொடி, கால்களையும் சுற்றி இருந்ததால், குழந்தை பிறப்பதில் இவ்வுளவு சிக்கல்)

மீனாஜிக்கு காய்ச்சல் அதிகமா இருந்ததால்,வீட்டுக்கு போங்கனு அனுப்பி வெச்சோம். பிறந்த குழந்தையோட 2 நிமிஷம் விளையாண்டுட்டு கிளம்பிட்டாங்க .

அடுத்த சிக்கல்.
பிரசவித்த அந்த பெண்ணிற்கு பெரிய அளவில் அடிப்பகுதியில் காயம் இருந்தது(tear ).சிக்கலான பிரசவத்தில், இப்படி தான் ஆழமான காயம் ஏற்படும் . மிகவும் ஆழமான இடத்தில் தையல் போட வேண்டும்.முயற்சி செஞ்சேன்...முடியலை...ரத்தப் போக்கு அதிகமா இருந்தது.எனக்கு உதவ மீனாஜி போல அனுபவம் வாய்ந்த ஒருவர் வேண்டும்.என்ன செய்றது ? திரும்பவும் அவரே வந்துவிட்டார்.யாரோ அவரிடம் சொல்லி இருக்கிறார்கள்.அவர் தான் முதல் தையல் போட்டார்(apex).ரொம்ப சிக்கலா இருந்தது.இருவரும் தையல் போட 1 1/2 மணி நேரம் ஆனது.
தையல் போட்டு முடிச்சதும் தான் எனக்கு உரைத்தது: மீனாஜி நின்னுகிட்டு தையல் போட்டு இருக்காங்க, நான் வசதியா நாற்காலி மேல உட்கார்ந்துகிட்டு அவங்களுக்கு உதவி இருக்கேன்.
அவங்களுக்கு முகமெல்லாம் வேர்வை. காரணம் மலேரியா காய்ச்சல்.
எல்லாம் முடிஞ்சு சிரிச்சிகிட்டே கிளம்பினாங்க.

வெளிய வந்ததும் நான் அலுத்துகிட்டே சொன்னேன்: " பாருங்க மீனாஜி, காலையில இருந்து ஒரே வேலை. அறையில சில மணி நேரம் தான் இருக்கிறேன்...ஆஸ்பத்திரியிலேயே இருக்கிறேன்...இதுல,கல்யாணம் பண்ணிக்கோ னு வீட்ல தொந்தரவு செய்றாங்க. கல்யாணம் கட்டிகிட்டு, அடிக்கடி இப்படி ஆஸ்பத்திரியிலேயே இருந்தா, வர பொண்ணு என்ன பண்ணும்? திரும்ப அவங்க அம்மா வீட்டுக்கே ஓடி போயிடுமே"
உடனே அவர் சிரிச்சிகிட்டே சொன்னது: "எனக்கும் தான் கல்யாணம் ஆகி குழந்தைங்க இருக்கு .நான் இந்த வேலையையும் வீட்டு வேலையையும் செய்யலையா ? கணவர் ஓடி போய்விட்டாரா ?" 

ஆமா...ல....
வீட்டு வேலை எதுவுமே செய்யாம, ஒரே ஒரு வேலை செய்றதுக்கே,நான் இப்படி அலுத்துக்குறேனே ?
மீனாஜிக்கு இரண்டு சின்ன பசங்க.அத்துனை வீட்டு வேலையும் செஞ்சிட்டு, வேலைக்கு போறாங்க.திரும்ப ராத்திரி எந்த நேரமானாலும் வந்து பிரசவம் பாக்குறாங்க.அவங்க இருக்குறாங்கன்னு தெரிஞ்சு தான் பிரசவத்திற்கு இவ்வுளவு பெண்கள் வறாங்க.

யாருக்காவது மலேரியா வந்தா, காய்ச்சலில் சுருண்டு படுத்துப்பாங்க.ஆனா இவ்வுளவு ஜூரத்திளையும் ,சிக்கலான பிரசவம் பார்த்து, நான் கூப்பிடாமலேயே வந்து தையல் போட்ட மீனாஜியை எப்படி பாராட்டுறது ? அவங்க மட்டும் இல்லைனா, இன்று ஒரு உயிர் போயிருக்கும் .அவங்க தான் எனக்கு அடுத்த motivation ஊக்கம்...

நமக்கு பெரிய பெரிய தலைவர்கள், எழுத்தாளர்கள் மட்டும் தான் motivationனாக இருக்கணும்னு அவசியமில்லை.நம்மை சுற்றி அப்படி நிறைய பேர் இருக்குறாங்க.நாம் தான் அவங்கள கண்டுகுறது இல்லை.  

எங்கள் மருத்துவமனையில் பணி செய்து விட்டு, மாறுதல் பெறும் மருத்துவர்களுக்கு, நான் சின்ன அளவில் ஒரு பிரிவு உபசாரம் கொடுப்பேன்.எல்லாருக்கும் முன், 2 நிமிடம் அவர்களை பாராட்டிவிட்டு,நன்றி சொல்வேன். நான் ஏன் இப்படி செய்றேன்னு எல்லாரும் கேட்பார்கள் .
எனது பதில்: "பெரிய பதவியில் இருப்பவர்களுக்கு , நல்லது செய்தவர்களை பாராட்ட,நன்றி தெரிவிக்க நேரம் இருப்பதில்லை. நாம் தான் ஒருவருக்கொருவர் பாராட்டிக் கொள்ள வேண்டும் "- வசூல்ராஜா படத்தில் கமலஹாசன் பேசிய வசனம்.