தமிழகத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரி.
உங்களோட ஊசிப்பட்டாசு அங்கே சம்பளத்துக்கு வேலை பார்த்த சமயம். மருத்துவ மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர் வேலை. மாணவர்களை அவனுக்கு ரொம்ப பிடிக்கும். மாணவர்களுக்கும் அப்படியே. கல்லூரி நேரம் போக மாலை, இரவு வேளைகளிலும் மாணவர்களுக்கு உதவுவான், பாடம் சொல்லிக்கொடுப்பான். 

இரவு 7 மணி. கல்லூரி நூலகம்.
மாணவர்களின் பவர் பாயிண்ட்களை சரிசெய்து கொண்டிருந்தான். அவர்கள் வருகைக்காக காத்துக்கொண்டிருந்த வேளையில், நூலகத்தில் வேலை பார்க்கும் இளம் வயது பெண் இங்கும் அங்கும் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருப்பதை கவனித்தான்.18, 19 வயது இருக்கும். அவன் கேட்ட புத்தகத்தை தேடித்தேடி கொடுத்தார். புத்தகங்களை கொடுப்பதற்கு முன், அதனை துணியால் துடைத்தார், ஒரு முறை அட்டையை பார்ப்பார், உள்ளே திறந்தும் பார்ப்பார். அவனருகே வந்து அவன் படிக்கும் புத்தகத்தையும் லேப் டாப்பையும் பார்த்தார். சாதாரண நூலக ஊழியர் போல் இல்லாமல் சிறு குழந்தைகளுக்கு இருக்கும் அதே ஆர்வம் அவரிடம். அழைத்து விசாரித்தான். 

“+2 படிச்சிருக்கேன்…சின்ன வயசுலேயே அப்பா செத்துபோயிட்டார்…அம்மா வீட்டு வேலை…ஒரே தம்பி, பள்ளியில் படிக்கிறான்… குடும்பத்தை காப்பாற்ற இங்கே வேலை பார்க்கிறேன்…மாதம் 2500-3000 சம்பளம்...”
மேலே படிக்கலையா என்ற கேள்விக்கு, அவர் கண்களில் கிட்டத்தட்ட கண்ணீர்.
“ எம்.பி.பி.எஸ் படிச்சு டாக்டராகணும்னு ஆசை..கட் ஆப்____வாங்கினேன்…எஸ்.சி… 2 மார்க்குல மெடிசின் கிடைக்கல”.
"இஞ்சினியரிங் கிடைக்கலையா?"
“டீச்சர் ட்ரெயினிங் கிடைச்சுது….படிக்க வசதியில்லை. சம்பாதிச்சா தான் குடும்பத்த நடத்தமுடியும்”
எம்பிபிஎஸ் சீட் கிடைக்கவில்லை. அதனால் தான் மெடிக்கல் புத்துகங்களை ஆர்வமா பார்த்திருக்கிறார். ஒரு வேளை, அதனால் தான் மருத்துவக்கல்லூரியில் வேலை செய்கிறாரோ என்னவோ. என்ன சொல்லி ஆறுதல் சொல்றதுனு தெரியாம பட்டாசு நமத்து போய் உட்கார்ந்திருந்தான்.

சில நிமிடங்களில் லேப் டாப்புடன் ஒரு மாணவி வந்தார். வகுப்பில் சில மாணவர்களிடம் மட்டுமே லேப் டாப் இருந்தது. இவர் செய்திருந்த பவர் பாயிண்டை பார்த்ததும் ஆச்சர்யம். லேப் டாப்பை கையாளும் விதமும் அதிசயமாய் இருந்தது. இந்த ஊசிப்பட்டாசு எம்பிபிஎஸ் படித்த காலத்தில் லேப் டாப்பை உபயோகப்படுத்தியதேயில்லை. எம்டி படிக்க கல்லூரி சேர்ந்த போது தான், ஸ்டைஃபண்டை வைத்து லேப் டாப் வாங்கினான், பவர் பாயிண்ட் கத்துகிட்டான். இந்த சின்ன பொண்ணு, இவ்ளோ வேகமா டைப்படிக்குது, அனிமேஷன் போடுது.விசாரித்தான். 

“சார் ஸ்கூல் படிக்கிறப்பவே லேப் டாப் வாங்கிட்டேன்…. ஸ்கூல்லயே பவர் பாயிண்ட் சொல்லிக்கொடுத்துட்டாங்க…. “
பள்ளியில் படிக்கும் காலத்திலேயே லேப் டாப் வாங்கி கொடுத்திருக்காங்களா? பணக்கார பெற்றோர்கள் தான். கிளம்பும் போது விசாரித்தான்:
“சார், அம்மா_______யில் (நல்ல பதவி) வேலை பாக்குறாங்க...அப்பா___________(மாவட்ட அளவில் உயர் அரசு பதவி) வேலை பாக்குறாங்க…. கட் ஆப்____”.
கட் ஆஃப்பை கேட்டதும், ஏதோ யோசிச்சான் நம்ம பட்டாசு.
“சார், நான் ரிசர்வேஷன் சார்….கவர்மெண்ட் கோட்டல சீட் கிடைச்சது..."
இந்த அரசு அதிகாரிகளின் மகள் வாங்கிய கட் ஆஃப், நூலக பணியாளராக வேலை பார்க்கும் பெண்ணின் கட் ஆஃப் ஐ விட சரியாக 3 மதிப்பெண் அதிகம். இவரின் பெற்றோர்களின் மொத்த மாத சம்பளம் ஒரு லட்சத்தை தாண்டும். நூலக அறையை விட்டு வெளியே கிளம்பும் வேளையில், அந்த பெண் ஊழியர் தரைய விளக்கமாற்றால் பெருக்கிக்கொண்டிருந்தார். சோகமாய் வெளியே வந்தவனுக்கு, நூலகத்தின் வெளியே, அந்த வசதியான மாணவி, பெற்றோரின் காரில் ஏறிக்கொண்டிருந்ததை கவனித்ததும் இன்னும் அதிர்ச்சி.

பல மாதங்கள், வருடங்கள் ஆகிவிட்டாலும், ஊசிப்பட்டாசின் வாழ்க்கையில் இது ஒரு மறக்க முடியாத சம்பவம். நம் சமுதாயத்தின் அவல நிலையை ஒரே இடத்தில் புரிந்தது கொள்ள முடிந்தது. இட ஒதுக்கீடு எதற்காக? யாருக்கு வழங்கப்பட வேண்டும்? சமுதாயத்தில் பின் தங்கிய வகுப்பை சேர்ந்தவர்களும் முன்னேற வேண்டும்,காலம்காலமாக ஒடுக்கப்பட்டவர்களும் மற்றவர்களைப்போல் சுயமரியாதையுடன் வாழ வழிவகை செய்யத்தானே இட ஒதுக்கீடு? 

இந்த இரண்டு மாணவிகளும், தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். பள்ளியில் படிக்கும் காலத்தில், இவர்களில் யாருக்கு வசதி வாய்ப்புகள் அதிகம் இருந்தது? அரசு அதிகாரியின் மகளுக்குத்தானே? பெற்றோர்கள் இருவரும் அரசு அதிகாரிகள், உயர் பதவிகள், நல்ல சம்பளம், கார், நல்ல வசதிகள் உள்ள பள்ளி…இவ்வுளவு வசதிகள் இருக்கும் மாணவிக்கு எதற்கு உயர் கல்வியில் அரசு ஒதுக்கீடு வழங்க வேண்டும்? தாழ்த்தபட்ட பிரிவைசேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திலா? சரி, லைப்ரரியை கூட்டிப்பெருக்கும் அந்தச்சின்னப்பெண்ணும் தாழ்த்தப்பட்டவர் தானே? அவருக்கு ஏன் எம்பிபிஎஸ் சீட் மறுக்கப்பட்டது? அவருக்கு அப்பா கிடையாது, அம்மா சொர்ப்ப வருமானத்தில் வீட்டு வேலை செய்பவர், வசதிகள் குறைவாக உள்ள அரசுப்பள்ளியில் படிப்பு, அவருக்குத்தானே நியாயமாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அது வழங்காததால், குடும்பம் நடந்த வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக படிக்கும் வயதில் தரையைப்பெருக்கும் நிலை ஏன்? மூன்று மதிப்பெண் குறைவாக வாங்கியதால் இவருக்கு சீட் கிடைக்கவில்லை. இவரது சீட்டைத்தான் வசதியான அந்த மாணவிக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்று கருதலாமா? 

சமூக நீதிக்காக இடஒதுக்கீடு அவசியம் தான். ஆனால் அது யாருக்கு வழங்கப்பட வேண்டும்? எந்த அடிப்படையில் வழங்கப்படவேண்டும்? சாதி அடிப்படையிலா ? பொருளாதார அடிப்படையிலா? சாதி அடிப்படையில், பின் தங்கிய வகுப்பினர்களில் உள்ள Non Creamy Layer பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கே உயர் கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கப்படவேண்டும் என்பது தானே முறை. தற்போதைய நிலையே தொடருமானால், ஒரே குடும்பத்தில் மூன்றாவது தலைமுறையாக மருத்துவர்களும், ஒரே குடும்பத்தில் மூன்றாவது தலைமுறையாக துப்புரவு ஊழியர்களும் உருவாகிக்கொண்டே தான் இருப்பார்கள். சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கும். 

- ஊசிப்பட்டாசு