எனக்கு தினமும் யாராவது ஒருவர், பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருக்குறாங்க .

ஆசிரியர்கள் , பேராசிரியர்கள் சொல்லிக் கொடுத்த பாடம் பெரும்பாலும் மறந்து போய்விடும். நாம சந்திப்பவர்கள், நமக்கு சொல்லிக் கொடுக்காம சொல்லிக் கொடுக்கும் பாடங்கள் மனசுல அப்படியே பதிஞ்சிடும் . 

" டாக்டர் ,என் அத்தைக்கு சிறுநீர் போகுற ட்யூப் போடணும். போடுறீங்களா?"னு எங்க ஹாஸ்டலில் துப்புரவு வேலை செய்பவர் இன்று காலை என்னிடம் கேட்டார்.
"அவங்களுக்கு என்னப்பா பிரச்சனை ?"னு கேட்டேன்...
"அவங்களுக்கு இடுப்புக்கு கீழ உணர்ச்சி கிடையாது சார்.நடக்க முடியாது .முதுகுல ஏதோ பிரச்சனை"னு சொன்னார்.


(இந்த நோயாளிக்கு paraplegia என்ற குறைபாடு இருக்க வேண்டும். paraplegia உள்ளவர்களால் எழுந்து நடக்க முடியாது. படுத்து இருக்கும் இடத்திலேயே சிறுநீர், மலம் கழித்துவிடுவார்கள். மற்றவர்கள் தான் சுத்தம் செய்ய வேண்டும். சிறுநீர் செல்லும் பாதையில் பிளாஸ்டிக் ட்யூப் செலுத்தி, தனியா ஒரு பையில் சேகரிச்சு அப்புறப்படுத்தணும்.)


"நான் உங்க வீட்டுக்கு வந்து ட்யூப்( urinary catheter) போடுவது சிரமம். தேவையான பொருளை எடுத்துகிட்டு , செவிலியரை கூட்டிகிட்டு வரணும் . அதனால ஒரே ஒரு தடவை நம்ம மருத்துவமனைக்கே (PHC) கூட்டிகிட்டு வாப்பா" னு சொன்னேன்.

இரவு 7 மணி இருக்கும்.
"சார் அத்தையை கூட்டிகிட்டு வந்துருக்கோம்.வந்து பாருங்க சார் "னு சொன்னார் .மூன்று பேர் வந்திருந்தனர். அவர்களை மூன்று பையன்கள் என்று தான் சொல்லணும். 20- 25 வயசு தான் இருக்கும்.

செவிலியர்களுடன் உள்ளே போய் பரிசோதித்தேன்.50 வயது பெண் நோயாளிக்கு இடுப்புக்கு கீழ் எந்த உணர்ச்சியும் கிடையாது.யாராவது இரண்டு மூன்று பேர் சேர்ந்து தான் உட்கார வைக்க வேண்டும்.என்ன காரணம்னு கண்டுபிடிக்க முடியவில்லை. அவரிடம் எந்த ஒரு மருத்துவ ரெக்கார்டும் இல்லை.

சரி ,கத்தீட்டர் மாத்தலாம்னு தயாரானோம்.
பழைய கத்தீட்டரை வெளியே எடுக்க தொடங்கினேன்.ஒரே துர்நாற்றம்.


(மருத்துவ துறையில் இருப்பவர்களுக்கு இது போன்ற நாற்றம் பழக்கப்பட்ட ஒன்று தான்.பல நாள் அழுகிய பிணத்தை கூட மிக அருகில் சென்று பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்). 


ஆனால் உடலில் இது போன்ற துர்நாற்றம் வந்தால் கிருமி தொற்று இருக்கு, பிரச்சனை அதிகம்னு அர்த்தம்.
அறை முழுதும் அந்த வாடை பரவியது.
அவரின் சிறுநீர் துவாரத்தை சுத்தப்படுத்தினோம்.
புதிய கத்தீட்டர் போட்டதும், உள்ளே இருந்து சிறுநீருக்கு பதில் 'சீல்' வெளியே வந்தது.தொற்று கிருமி அதிகமா பாதிச்சு இருக்கு.
கத்தீட்டரை ரொம்ப நாள் மாற்றாம இருந்ததினால் இப்படி கிருமி தொற்று ஆகி இருக்கலாம்.

அறைக்கு வெளிய வந்து, "ஏம்பா, கடைசியா எப்போ ட்யூப் மாத்துனீங்க?"னு கேட்டேன்.
"அத போட்டு 2 மாசம் ஆகுது சார்.இதுவரை மாத்தவே இல்லை"னு அந்த பசங்க சொன்னாங்க. 
"ரெண்டு மாசமா ?". எனக்கு கோவம் பயங்கரமா வந்துச்சு.கோவத்த கட்டுபடுத்தி,"2 மாசமா மாத்தாம என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க?" னு கேட்டேன்.
"சார் ட்யூப் மாத்தனும் னு யாருமே சொல்லலை "னு அப்பாவியா சொன்னங்க. 
இவர்கள் பள்ளிக்கூடமே போனதில்லையாம் .இருவர் துப்புரவு தொழிலாளிகள்.இன்னொருவர் ட்ரை சைக்கிளில் கட்டிட சாமான் எடுத்து செல்பவர். 

ஆண்டிபயாடிக் மருந்து தொடங்கினோம்..
பரிசோதனைக்கு 'சீல்' எடுத்து வைத்தேன் .
கிராமத்து மருத்துவமனையில் அதிக வசதி இல்லை.
"திரும்ப காலைல கூட்டிகிட்டு வாங்க. அடுத்த ஊசி போட்டுக்கிட்டு ,பெரிய ஆஸ்பத்திரிக்கு போக வேண்டும்.ரத்த பரிசோதனை செய்ய வேண்டும்.specialistஐ பார்க்க வேண்டும்.refer செய்கிறேன்" னு சொன்னேன்.

பேசிக் கொண்டிருக்கும் போதே, அம்மாவை பார்க்க அந்த பையன் உள்ள போக முற்பட்டார். 
"தம்பி கொஞ்சம் இரு பா. சிஸ்டர் அவங்களுக்கு டிரஸ் பண்ணிவிடுவாங்க. அதுக்கு அப்புறம் நீ உள்ள போகலாம் "னு சொன்னேன் .
"சார், நாங்க தான் சார் இத்தனை நாளா அம்மாவுக்கு எல்லாமே செய்யுறோம்"னு சொல்லி, உள்ள போய், ஆடை மாற்றி விட்டார்.
யாரோ என தலையில் சுத்தியலால் அடிச்சது போல இருந்துச்சு. 

இடுப்புக்கு கீழ் உணர்ச்சி இல்லாத அந்த அம்மாவுக்கு , 'எல்லாமே' இந்த மகன் தான் செய்து வருகிறார். உதவிக்கு இந்த ரெண்டு அண்ணன் மகன்களும் .
வசதி உள்ள வீட்டில் bed pan உபயோகிப்பார்கள்.
நிச்சயம் இவர்கள் வீட்டில் அது இருக்காது.அப்புறம் எப்படி இந்த பெண்ணின் கழிவுகளை இந்த பசங்க சுத்தம் செய்வார்கள் ?  
ஆண் பிள்ளைகள் அம்மாவிற்கு இந்த மாதிரி பணிவிடை செய்து நான் பார்த்ததே இல்லை.அதுவும் இவ்வுளவு துர்நாற்றம் வீசுகிற பகுதியை தினமும் சுத்தம் செய்கிறார்கள் இந்த பையன்கள். 

நான் பார்த்த வரை, ஒரு பெண் நோயாளிக்கு, உடலை சுத்தம் செய்வது இன்னொரு பெண்ணாக தான் இருப்பார் (அம்மா, அக்கா,தங்கை) சில குடும்பத்தில் கணவரும் அப்படி காதலுடன் உதவி செய்வார்.மற்றவர்களுக்கு இந்த வேலை அருவருப்பா இருக்கும். இல்லைனு மறுப்பது பொய் .

மூணு பசங்களும் உள்ள போனாங்க.அம்மாவ அப்படியே தூக்கிகிட்டு வெளிய வந்து,ட்ரை சைக்கிள்ல உட்கார வெச்சி தள்ளிகிட்டே போனார்கள்.(photo)
பள்ளிக்கு கூட போகாத இந்த பசங்க, டிகிரி படிச்ச எனக்கு என்னமோ புரிய வெச்சுருக்காங்க. ஏதோ ஒரு பயம் வந்திடுச்சு.




.....சில சந்தேகங்கள்…….

நமக்கும் எப்போ வேணாலும் இந்த மாதிரி உடம்புக்கு முடியாம போகலாம். அப்போ நம்ம பையன் இந்த மாதிரி உதவி செய்வானா? மாட்டான் என்று தான் தோணுது.
நிச்சயம் அவன் ஒரு டிகிரி படிச்சிடுவான் .
உடம்ப சுத்தம் செய்வது, துணி மாற்றுவது , ஊட்டிவிடுறது போன்ற அன்றாட பணிவிடை செய்வான்னு நினைக்குறீங்களா ? மாட்டான் .

நம்ம பசங்ககிட்ட கார் இருந்தாலும் , இந்த ட்ரை சைக்கிள்ல வெச்சி தள்ளி கிட்டு போகிற அன்பு இருக்கும்னு நினைக்குறீங்களா ?
வயசான காலத்துல, நம்மள நம்ம பசங்க ,சுமையா தான நினைப்பாங்க ?

நாம எதையோ தொலைச்சிகிட்டு இருக்கோம் தானே ?
எல்லாரும் எதுக்காகவோ வேகமா ஓடுறோம் .
'என் கிட்ட படிப்பு இருக்கு,வேலை இருக்கு,பணம் இருக்கு'னு யாரையும் கண்டுகாம ரோபோ மாதிரி விரைப்பா ஓடிக்கிட்டு இருக்கோம்.


நம்ம எல்லோரையும் ஒருத்தன் பார்த்துகிட்டு தான் இருக்கிறான்.
ரொம்ப ஆடுனா, "என்கிட்டே ஆப்பு இருக்கு"னு ஒரு நாள் நமக்கு புரிய வெச்சிடுவான்.