இன்று சென்னை-டெல்லி, இனிமையான விமான பயணம்.
*****************************************************

1) டெல்லி ஃளைட்டுக்குள்ள ஏறுனதும்,"ஒரு வேள இது பிரிட்டீஷ் ஏர்வேஸா இருக்குமோ ?"னு ஒரு சந்தேகம். 
ஆமா பின்ன எல்லாரும் இங்கிலீசுல தான பேசுறாங்க. 
60 வயசு தமிழ்நாட்டு மாமா ," can i get an english newspaper"னு பணிப்பெண்கிட்ட பீட்டர் விட்டார்.  
டீ ஷர்ட் போட்ட தமிழ்நாட்டு அக்கா, தன்னோட 6 வயசு பொண்ணுகிட்ட இங்கிலீஷ்லயே அதட்டி உதார்விட்டுகிட்டு இருந்தாங்க.

"ஃப்ளைட் கிளம்ப போகுது. போனை ஸ்விட்ச் ஆஃப் செய்யங்க"னு அறிவிச்சதும் ,எல்லா இங்கிலீஷ் துரைகளோட சாயமும் வெளுத்துடுச்சு: "நான் ஃப்ளைட்ல ஏறிட்டேன் மா", "பாப்பாவ பத்திரமா பாத்துக்கோங்க" , " அம்மு நான் வரட்டா" " ம் கிளம்பிட்டேன் " "டாடிக்கு பை பை சொல்லு"- ஆஹா….இந்த இங்கிலீஷ் நடிகர்கள், வீட்டுக்கு ஃபோன்ல பேசுறப்போ மட்டுமாவது தமிழ்ல பேசுறாங்களே.

2) கரும்பு சாறு தான் இனிப்பா ?
கிடையவே கிடையாது.
ஸ்கர்ட் போட்ட பணிப்பெண்கள் சிரிச்சுகிட்டே , புரியாத பாஷையில கொஞ்சி கொஞ்சி பேசுறது தான் இனிப்பு.



3) " apple laptop யூஸ் பண்றீங்க. இப்படி இண்டீசெண்டா பொட்டலத்துல சாப்பாடு கொண்டு வந்துருக்கீங்களே?"னு பக்கத்தில் இருந்த ஒரு தமிழர் இங்கிலீஷில் என்கிட்ட நக்கல் கேள்வி கேட்டார்.

எனக்கு பயங்கர கோவம்.
"எங்க தோட்டத்து எழுமிச்சை பழத்த வெச்சு, என் பாட்டி செஞ்ச சாப்பாடு இது. எனக்கு என்ன பிடிக்கும் எவ்ளோ சாப்பிடுவேனு அவங்களுக்கு தான் தெரியும். இத எங்க வீட்டு வாழையிலையில வெச்சு ஆசையா கட்டி கொடுத்தது என் அப்பா. இத சாப்பிடுறதுல என்ன indecency இருக்கு ?  

இந்த ஃப்ளைட்ல கொடுக்குற காஞ்சு போன பிரியானிய செஞ்சது யார் தெரியுமா ? 
எப்பொ செஞ்சாங்க தெரியுமா ? 
சில்வர் ஃபாயில்ல சுத்தி கொடுத்தா சுத்தமானதா ? ஃளைட்டுக்குள்ள இவங்க ரீஹீட் பண்ணி தர சாப்பாடால என்ன நோய் வரும் தெரியுமா?"னு விடாம பதில் கேள்வி கேட்டேன்.
நக்கல் கேள்வி கேட்ட சக பயணி பதில் ஏதும் சொல்ல முடியல.
laptop உபயோகிச்சாலும் சாப்பாட கையால எடுத்து வாய் வழியா தான சாப்பிட முடியும் ?

4) பணிப்பெண் : மேடம் குழந்தைய அவன் சீட்டுல உட்கார வெச்சு பெல்ட்டு போட்டு விடுங்க."
பயணி : இவன என் மடிய விட்டு இறக்குனா அழறான் . மடியில வெச்சு நான் பாத்துக்குறேன் .

பணிப்பெண் : மேடம், ப்ளீஸ் கோஆபரேட் பண்ணுங்க. இப்போ 15 ஆயிரம் அடி உயரத்துல பறக்குறோம். கொஞ்ச நேரத்துல லேண்டிங் . அவசியம் குழந்தைக்கு பெல்ட்டு போடணும்.

சரினு அந்த அம்மா , ரெண்டர வயசு வால் பையன, பக்கத்து சீட்டுல உக்கார வெக்குறாங்க.
வீல்ல்ல்ல்னு சத்தம்.
பையன் அலாரம் அடிச்ச மாதிரி அழுதான்.
பணிப்பெண் காத மூடிகிட்டார்.
எல்லா பயணிகளும் திரும்பி பாக்குறாங்க.

பணிப்பெண் : ஓகே ஒகே மேடம் . குழந்தைய மடியிலேயே வெச்சுக்கோங்க.

பணிப்பெண் ஒரு ரெண்டர கிட்ட பணிஞ்சிட்டார்.
அது ! யார் கிட்ட ? நடக்குமா ?
யசோதையாலேயே வால் பையன அடக்க முடியலையாம். நீங்கள்லாம் எம்மாத்திரம்?


5) ஒரு 80 வயது முதியவருக்கு அவசரமா பாத்ரூம் போகணும். கதவ தட்டினார். தள்ளினார்.
"உள்ள இன்னொருவர் இருக்கிறார், கொஞ்சம் பொறுங்க"னு பணிப்பெண் சொன்னது கூட அவரால் புரிஞ்சிக்க முடியல.
எல்லாருக்கும் சிரிப்பு.

6) அருகில் 55 வயது மருத்துவர் .என்னைப் பற்றியும் என் ஃபோனை பற்றியும் விசாரித்தார். திடீர்னு "உனக்கு எப்போ கல்யாணம்?"னு கேட்டுவிட்டார் .
எனக்கு ஆச்சர்யம் .


"எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலைனு எப்படி சார் கண்டுபிடிச்சீங்க?”
"உங்க ஃபோன்ல உங்க ஃபோட்டோவ ஸ்கிரீன் ஸேவரா வெச்சுருக்கீங்க.கல்யாணம் ஆகியிருந்தா மனைவி போட்டோவ தான் வெச்சிருப்பீங்க.வெச்சே ஆகணும்.இல்லைனா நடக்குறதே வேற." 
அடா அடா அடா. என்ன ஒரு தத்துவம் ? எல்லாம் அனுபவம்.

7) ஃப்ளைட் தரை இறங்குது.
ஷ்ஷ் ஆஆ னு மெல்லிய சத்தம்.
திரும்பி பார்த்தேன்.
30 வயசு பெண் , பயத்துல கண்ண இறுக்கமா மூடிகிட்டு, தன் கணவர் கைய அழுத்தமா பிடித்திருக்கிறார்.
ஏதாவது அசம்பாவிதம்னா ரெண்டு பேரும் தான மேல போய் சேரணும்? கணவரால் மனைவிய எப்படி காப்பாத்த முடியும் ?
இதுல அறிவுக்கு வேலையே இல்ல. காப்பாத்த முடியாது தான்.
ஆனா துணைகிட்ட மட்டுமே கிடைக்கும் பாதுகாப்பு . நம்பிக்கை உணர்வு.
சீக்கிரம் என் கையையும் யாராவது பிடிப்பாங்க.

8) இறங்குறப்போ , பைலட் எல்லாருக்கும் நன்றி தெரிவித்தார்.
பயணிகளும், "ஸ்மூத் லேண்டிங். தேங்க்யூ"னு அவருக்கு நன்றி தெரிவிச்சாங்க.
எத்தன தடவ நாம பேருந்து, ரயில்கள்ல பயணிச்சிருப்போம்.
பத்திரமா நம்மல கொண்டு சேர்த்த அந்த ஓட்டுனர்களுக்கு நாம் நன்றி தெரிவிச்சிருப்போமா ?


9) ஆண்களுக்கு , பெண்களுக்கு , நடக்க முடியாதவர்களுக்குனு 3 வித கழிப்பறை. அட. இது போல பேருந்து நிறுத்தங்கள்லயும் நடக்க முடியாதவர்களுக்கு தனி கழிப்பறை வெக்கலாமே ?

நடக்க முடியாதவர்களுக்கு தனியே சக்கர நாற்காலி. அவர்களை அதில் அமர்த்தி விமானம் வரை அழைத்து வர அன்பான பணியாட்கள். நம்ம ஊர் பேருந்து படிகட்டுகளில் இவர்களால் எப்படி ஏற முடியும் ?

'ஒரு நாள் நமக்கும் வயதாகும்'னு நினைப்பிருந்தால், வயதானவர்களுக்கும் ஏற்ற மாதிரி பேருந்துகளை வடிவமைத்திருப்பார்கள்…

10) ஒரு 70 வயசு பாட்டி, வேகமா பெல்ட்டில் வந்த பெரிய பயண பைய இறக்க முடியாம சிரமபட்டார்.
நான் இறக்கி கொடுத்ததும் , "நன்றி தம்பி"னு என் தலையியில கை வெச்சு வாழ்த்துனாங்க.
இருந்தாலும் அந்த 70 வயசு பாட்டிக்கு நான் தம்பியா ?

வெளிய வரப்போ, ஒரு தம்பதி ட்ராலியில பயண மூட்டைகள வெச்சு, அது மேல 2 குட்டி குழந்தைகள உட்கார வெச்சு, தள்ளிகிட்டே வந்தாங்க. விளையாடிக்கிட்டே வந்த அந்த 2 பொடிசுகளும், என்னய பாத்து சிரிச்சுகிட்டே "பை அங்கிள்"னு சொன்னதுடன் சந்தோஷமான பயணம் முடிவுக்கு வந்து..

- பாலாஜி.