I support ………..நு ஒரு template எழுதி வெச்சுக்குவோம். இளையராஜா, விஜயகாந்தை தொடர்ந்து paid மீடியாவின் முகத்திரையை கிழிக்கப்போகும் பலரின் பெயர்கள் இந்த கோடிட்ட இடத்தை விரைவில் நிரப்பும் என எதிர்பார்க்கலாம்.
சில நாட்களுக்கு முன் சென்னை நகரமே வெள்ளத்தில் மூழ்கியது, தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. ஒட்டு மொத்த தமிழகமே துயரத்தில் ஆழ்ந்திருந்த சமயத்தில் பொதுமக்களும் தன்னார்வளர்களும் தான் களத்தில் இறங்கினார்கள். இவர்களே சென்னைக்கு உயிரும் கொடுத்தார்கள். நிலைமையை சரி செய்ய வேண்டிய ஆட்சியாளர்கள் எங்கே ஓடி ஒளிந்தார்கள் என மக்கள் கடும் கோபத்தில் இருந்தனர். பத்திரிக்கையாளர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? ஆளுங்கட்சியினரை அல்லவா தேடிப்பிடித்து கேள்விகேட்டிருக்க வேண்டும்? எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்? என்ன நடவடிக்கை எடுத்தீர்கள், பொது மக்களுக்கு என்ன Advisory கொடுக்குறீர்கள்? என்றல்லவா கேட்டிருக்க வேண்டும். செய்தார்களா ? ஒரு சில பத்திரிக்கையாளார்களை தவிர்த்து, ஒட்டுமொத்த பத்திரிக்கைத் துறையினரும் சம்பந்தமே இல்லாத தலைப்புகளுக்கு ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுத்து விவாதித்துக்கொண்டிருந்தார்கள்.
பிரச்சனையை திசைதிருப்ப சிம்பு பிரச்சனைக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுத்தார்கள். நடிகரைத்தேடிப்பிடிக்க தனிப்படைகளாம். வெள்ளம் பாதித்த சமயத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் என்ன செய்துகொண்டிருந்தார்? அவரைத்தேடிப்பிடித்து பேட்டி எடுத்திருக்கலாமே? Health secretary தான் அம்மாவின் ஆணைக்கிணங்க பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தார். இதே சமயத்தில் Parisல் COP 21 United nations conference on climate change என்ற முக்கியத்துவம் வாய்ந்த கான்ஃபரென்ஸ் நடைபெற்றது. அது பற்றி தமிழக ஊடகங்கள் விவாதித்தார்களா? இல்லையே. இந்த மாநாட்டில் இந்தியாவின் நிலைபாடு என்ன, அது சரியா தவறானு விவாதம் செய்தால்தானே பொதுமக்களுக்கும் மாணவர்களும் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படும். இதைவிடவா ஒரு நடிகர் எழுதிய பாத்ரூம் பாடல் முக்கியத்துவம் வாய்ந்தது?
இளையராஜா இசையமைப்பாளர், காசுக்காகத்தான் இசையமைக்கிறார். வயது முதிர்ந்தவர். ஆனாலும் அவரே வெள்ளத்தில் இறங்கி படகின் மூலம் பயணித்து மாற்றுத்திறன் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு நேரில் சென்று ஆறுதல் கொடுக்கிறார், வெள்ளம் சூழ்ந்த குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று உணவு பொட்டலம், போர்வைகள் வழங்கினார். இன்றும் அதற்கு சமூகவலைதளங்களில் பல பெண்கள் அவரைப்பாராட்டி எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் அவர் செய்திருக்க வேண்டியதே இல்லை. அவரது உதவியாளர்களே செய்திருக்கலாம். ஆனாலும் நேரில் சென்றது அவரது இளகிய மனசை பிரதிபலிக்கிறது. அவரது இசையைப்போலவே அவரது இந்த செயலும் மனதில் நீங்காமல் இடம்பிடித்துவிட்டது.
(ஜிப்மர் சார்பாக வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு எங்களது PSM துறை மூலமாக தொடர் மருத்துவமுகாம்கள் நடத்திக்கொண்டிருந்தோம். அது தவிர, ஜிப்மர் மருத்துவர்கள் தாமாக முன்வந்து குழு அமைத்து, நிதி வசூலித்து தினம் ஒரு கிராமத்திற்கு நேரில் சென்று நிவாரணப்பொருட்கள் வழங்கிக்கொண்டிருந்தார்கள். என்னால் ஆன பண உதவியை மட்டும் செய்துவிட்டு நான் ஒதுங்கிவிட்டேன்.அதே நேரத்தில் கல்லூரி மாணவர்களுக்கு இறுதித்தேர்வும் நடைபெற்றது)
இளையராஜாவின் இந்த செயலைப்பார்த்ததும் எனக்குள் குற்றஉணர்ச்சி. 'அவரே போகிறார், உனக்கென்னடா கேடு’னு நானும் சில ஊர்களுக்கு நேரில் சென்று நிவாரணம் வழங்கினேன். இன்னும் அதிக பண உதவி கொடுத்தேன். என்னைப்போல் பலர் இளையராஜா மற்றும் பிரபலங்களின் நிவாரண உதவிகளைப்பார்த்து, அந்த உந்துதலால் தாமும் அதில் ஈடுபட்டிருப்பார்கள். உதவி செய்வது ஒரு infectious செயல், ஒருவரைப்பார்த்து இன்னும் பலர் உதவி செய்யத்துவங்குவர். அரசு இயந்திரம் செயலற்ற அந்த வேளையில் தன்னார்வளர்களே, மக்களைக்காப்பாற்றினார்கள். அப்படி உதவி செய்தவர்களையும் ஆளும்கட்சியினர் பல இடங்களில் துன்புறுத்தினார்கள்.
உதவி செய்த தன்னார்வளர்களுக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டு அதில் இளையராஜா பங்கெடுத்து ஆயிரக்கணக்கானவர்களுக்கு பாராட்டு பத்திரம் வழங்குகிறார். இது உணர்ச்சி பொங்க அமைந்த நிகழ்வு. அரசு செய்ய வேண்டியதை ஒரு தனி நபரே செய்கிறார். அந்த நிகழ்வில், அவரிடம் என்ன கேள்வி கேட்டிருக்க வேண்டும்? "ஐயா, எத்தனை பேருக்கு பாராட்டு பத்திரம் வழங்குனீர்கள்? இதைச்செய்ய என்ன காரணம் ? ஏதாவது நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடந்ததா?" -நல்ல மனநிலையில் உள்ள ஒருவர் இப்படித்தானே கேள்விகள் கேட்பார் ? அங்கே போய் சாக்கடைப் பாடலைப்பற்றி கேள்வி எழுப்பினால் ? கேள்வி கேட்பவருக்கு பைத்தியம் என்று தான் பட்டம் கொடுப்பார்கள். அதற்கு பிறகும் திருந்தாத சில ஊடகவியாளர்கள், இளையராஜாவை எதிர்த்து நோட்டீஸ் கொடுத்து மக்கள் எதிர்ப்பை மேலும் சம்பாதித்துக்கொண்டார்கள். எங்கே என்ன பேச வேண்டும் என தெரியாதவர்கள் எப்படி ஊடகத்தில் பணி செய்கிறார்கள் ?
ரத்ததான முகாமை துவக்கி வைக்கிறார் விஜயகாந்த். அந்த நிகழ்ச்சியில் தேர்தல் கூட்டணி பற்றி கேள்வி கேட்கிறார் ஒரு நிருபர். “பொதுக்குழு செயற்குழு மற்றும் நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்த பிறகு முடிவெடுப்போம்"னு பதில் சொல்லிவிட்டார் கேப்டன். விடாமல் நிருபர்கள் கேள்வி கேட்கிறார்கள். “இது ரத்ததான முகாம், அது பற்றி கேள்வி கேளுங்க”னு பதிலளிக்கிறார். ஒரு முறை இரண்டு முறை அல்ல, 8 முறை கூட்டணி பற்றி விடாமல் கேள்வி கேட்கிறார்கள் நிருபர்கள். ஒரு கட்டத்தில் வெறுத்துப்போய், "ஜெயலலிதாவிடம் இந்த கேள்வியைக்கேட்க முடியுமா, இங்க வந்து கேட்குறீங்க"னு கோபப்பட்டு துப்பிவிட்டு பேசினார் விஜயகாந்த். இதைப்பார்த்ததும், 'வேண்டுமென்றே ஒரு கட்சித்தலைவரை கோபப்படுத்தி அவர் அநாகரிகமாக ஏதாவது செய்ய மாட்டாரானு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் நிருபர்கள்' என்று தான் எண்ணத்தோன்றுகிறது.
பத்திரிக்கையாளர்கள் மக்கள் பிரச்சனைகளுக்கு ஏன் முக்கியத்துவம் வழங்குவதில்லை? பிரபலங்களிடம் ஏன் சம்பந்தம் இல்லாத கேள்விகளைக்கேட்கிறார்கள் ? இளையராஜாவோ, கேப்டனோ செய்தது சரினு யாருமே சொல்லல. ஆனாலும் இவர்களை ஒட்டுமொத்த பொதுமக்களும் ஆதரிக்குறாங்கனா, 'பத்திரிக்கைகாரர்கள் மீது பொதுமக்கள் அளவுகடந்த கோபம் கொண்டுள்ளார்கள்' என்று தான் அர்த்தம்.
இந்த இரண்டு சம்பவங்களும்,அதற்கு பொதுமக்கள் கொடுத்த ஆதரவும், பொதுமக்களை முட்டாள்களாக நினைத்த பத்திரிக்கைகளுக்கு கிடைத்த மரணஅடி. இனியேனும் பத்திரிக்கைகாரர்கள் ஊடக தர்மத்தை கடைபிடிக்கவில்லையென்றால், பொதுமக்களே அவர்களை நடுரோட்டில் வைத்து சாத்து சாத்தென்று அடி கொடுப்பார்கள்.
- பாலாஜி