
இன்றோடு 8 மாச தாயல்பூர் பணி முடிஞ்சுது..
இன்னைக்கு காலை,
வழக்கம் போல பரபரப்பு..
opd….புதுசா சேர்ந்த பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் வந்தாங்க. அவங்களுக்கு orientation வகுப்பு எடுத்து, கிராமப்புற பணியோட முக்கியத்துவத்த விளக்குனேன்.
மதியம் 1 மணி இருக்கும்.
சீனியர், 'seminar hallகு வா'னு கூப்பிட்டார்.
'எவ்ளோ வேல இருக்கு . இப்ப எதுக்கு என்ன அங்க கூப்பிடுறார்?' புரியாம குழம்பினேன்.
ஊழியர்களும் மாறி மாறி வந்து, 'வாங்க சார்'னு கூப்பிட்டாங்க.
குழப்பமா மாடிக்கு போன எனக்கு இன்ப அதிர்ச்சி.
கிட்டத்தட்ட 25 சுகாதார ஊழியர்கள்,மருத்துவமனை ஊழியர்கள்.
என்னை வரவேற்றாங்க.
ஓ ஓ புரிஞ்சிடுச்சு.
எனக்கு send off party கொடுக்க கூடியிருக்கிறார்கள்.
எனக்கே தெரியாம ரகசிய mission.
இதுக்கு தான் காலையில இருந்து கிசுகிசுத்துக்கிட்டே இருந்தாங்களா ?
சீனியர் :"பாலாஜி இன்னைக்கோட duty முடிக்கிறார்.அவர பத்தி என்ன சொல்லனும்னு நினைக்குறீங்களோ சொல்லுங்கனு சொன்னார்"
எல்லாரும் சிரிச்சாங்க.
பயங்கர சந்தோஷத்துல இருந்தாங்க.
நான்: " நான் போறதுல எல்லாருக்கும் இவ்ளோ சந்தோஷமா?"னு கேட்டேன். உடனே சத்தமா "இல்ல இல்ல சார்"னு பதில்..
நான் : "நான் தான் உங்க எல்லார் மேலயும் கோவப்பட்டுருக்கேனே.திட்டுவ
ஒரே சிரிப்பு...
ஒவ்வொருத்தறா எழுந்து என்ன பத்தி பாராட்ட ஆரம்பிச்சுட்டாங்க.
"உங்க கிட்ட தான் சார் தையல் போட கத்துக்கிட்டேன்.", " டெலிவரி கத்துகிட்டேன் ", "நீங்க சொல்லித்தர விதம் அச்சா சார் " , "நீங்க கோவப்பட்டதுனால தான் சார் நான் கத்துகிட்டேன்.”
பாராட்டுனதுல என்னால சிரிப்ப அடக்கவே முடியல.
"பேஷண்ட்டுக்காக தான் சார் நீங்க கோவப்பட்டீங்க.",
"திரும்பவும் இங்க வாங்க சார்" ,"நீங்களே மருத்துவ அதிகாரியா வாங்க சார் "
இது வரைக்கும் என்னை யாருமே இப்படி பாராட்டுனதில்ல.
அதுவும் மொழி தெரியாத ஹரியானா கிராமத்துல , வயசுல பெரியவங்க எல்லாரும் பாரட்டுனாங்க.
சீனியர் ( மருத்துவ அதிகாரி ) : " போன வருஷம் நம்ம பகுதி infant mortality rate(imr) 41 (imr- ஒரு வயதுக்குட்பட்ட 1000 குழந்தைங்ககளில் எத்தனை குழந்தைங்க
இறக்குறது) . இந்த வருஷம் imr 31 ஆ குறைஞ்சுடுச்சு..
இந்த சாதனைக்கு பல காரணம் .
முக்கிய காரணம் பாலாஜி.
எல்லாரும் கை தட்டுனாங்க.
நான் : "சார்…இல்ல சார் "
சீனியர் (என்ன பார்த்து): " நான் பேசுவேன்.நீ குறுக்க பேசக்கூடாது.நான் சீனியர். நீ பேசாத".
"போன வருஷம் இருந்ததோட இந்த வருஷம் நம்ம மருத்துவமனை பிரசவங்களோட எண்ணிக்கை 2 மடங்காயிடுச்சு."
"மலேரியா பரவுனப்போ, நானே பயந்துட்டேன். பாலாஜி இல்லைனா ஏதாவது நடந்திருக்கும். "
"நான் சீனியர்…ஆனா பாலாஜிகிட்டா நான் நிறைய கத்துகிட்டேன்."
ஒரே பாராட்டு மழை.
ஹரியான்வியில வேற பாராட்டுனாங்க. மொழி புரியாட்டியும் ஏதோ பாராட்டுறாங்கனு மட்டும் புரிஞ்சுது.
என்னை பேச சொன்னாங்க .
15 நிமிஷம் பேசுனேன். ஹிந்தியில….முடிஞ்ச அளவு ஹிந்திய கொலை செஞ்சேன்.
நான் : "வணக்கம்…… வந்த முதல் நாளே ஆட்டோ கவிழ்ந்து 10 பேர் அடிபட்டு வந்தாங்க. செவிலயர் நிறைய தவறு செஞ்சார். கோவப்பட்டு கத்தினேன்… 'கோவப்படுறதால பயன் இல்ல. சொல்லிக்கொடு'னு சீனியர் தான் புரிய வைத்தார்.
தினமும் பாடம் எடுத்தேன்…..எல்லாரையும் வேல வாங்கனேன்……ராத்திரி 2 மணி வரைக்கும் முழிச்சிருப்பேன்….யாராவது பணி நேரத்துல தூங்குனா எழுப்பி வேலை செய்ய சொல்வேன்…...நோயாளி ராத்திரி வரப்போ யாரும் தூங்கக்கூடாதில்ல ...…சீனியர் பாராட்டுன சாதனை எதுவுமே எனதில்லை.மொத்த தாயல்பூர் மருத்துவமனைக்கே சொந்தம்…மொத்த மருத்துவமனையும் முன்னேறிடுச்சு…..காவலாளி முதல் மருத்துவர் வரை சரியா வேலை செய்யுறாங்க.. யாரும் நோயாளிகிட்ட கோவப்படாதீங்க….அவங்க படிப்பறிவில்லாதவங்க, புரியாம பேசுனா அமைதியா புரிய வைங்க. …. இந்த மருத்துவமனை, பல வருஷமா கட்டுன ஒரு கண்ணாடி வீடு மாதிரி…இங்க ஒரு குழந்தை இறந்தாலும், கண்ணாடி வீட்டு மேல கல்லெறிவது மாதிரி. அந்த வீட்ட திரும்ப கட்டுறது நடக்காத காரியம். மக்கள்கிட்ட நம்ம மேல நம்பிக்கை போயிடும். திரும்ப நம்ம கிட்ட வரமாட்டாங்க. …… எனக்கு கடவுள் நம்பிக்கை அவ்வுளவா கிடையாது…ஆனா யாரோ நம்மல சேட்டிலை மாதிரி மேல இருந்து பாத்துக்கிட்டே இருக்குற மாதிரி நான் நினைச்சுக்குவேன்…தப்பு செஞ்சா அவர் உடனே நம்மல தண்டிச்சுடுவார்….வேல செய்யாம வெளிய போனா,நமக்கு வாகன விபத்து நடக்கலாம்…..சரியா வேலை செய்வோம்…உங்க உறவினர்கள் அத்தன பேருக்கும் நான் தான் மருத்துவம் பாக்கணும்னு என் கிட்ட கூட்டிகிட்டு வருவீங்க ….அதே அக்கறை நம்மகிட்ட வர நோயாளிகள்கிட்டயும் காட்டுங்க……நன்றி"
எல்லாரும் வாழ்த்துனாங்க..
எப்படி வாழ்த்துனாங்க?
பாலாஜி md pass பண்ணனும்னு வாழ்த்துனாங்களா ?
இல்லவே இல்ல.
"மனசார சொல்றோம் சார்.உங்களுக்கு எல்லாம் கிடைக்கணும்"
"சீக்கிரம் கல்யாணம் நடக்கணும்"
"உங்களுக்கு தகுந்த மனைவி அமையணும்"
" நிறைய குழந்த பிறக்கணும் "
இதெல்லாம் நான் கேட்டனா ?
"ரிங் செரிமனிக்கு கூப்பிடுங்க சார்."
"இன்விடேஷன் அனுப்புங்க சார்.கண்டிப்பா வறோம்"
பொண்ணு என்ன கையிலயா வெச்சிருக்கேன் ?
"ஹரியானா பொண்ணு பார்க்கலாமா சார் ?"
ஹை. ஹை ...இப்போ தான் விஷயத்துக்கே வந்திருக்காங்க....அடுத்து என்ன சொல்லப்போறாங்கனு ஆவலா இருந்தேன்.
உடனே சீனியர், "ஹரியானா பொண்ணு வேணாம்.சரி வராது.மொழி புரியாது..."னு சப்புனு விளக்க அமுக்கிட்டார்.
ச்ச.
ராத்திரி என் கூட படிக்கிற எல்லா கிராமத்து md மருத்துவர்களுக்கும் விருந்து கொடுத்தேன்.
ஒரு சீனியர் சொன்னார் : "எய்ம்ஸ்ஸோட நம்ம டிபார்ட்மெண்ட் வரலாற்றிலேயே ஒரு md மாணவருக்கு, கிராமத்து மருத்துவ ஊழியர்களே வழி அனுப்பு விழா நடத்துனது, முதல் முறையா உனக்கு மட்டும் தான் பாலாஜி. good .congrats"
சந்தோஷமா இருக்கு.
ஆனா நாளைக்கே இத பிரிஞ்சு டெல்லி போகணுமே…
bye bye dayalpur.
- பாலாஜி