சென்ற வாரம்.டெல்லி. இந்தியா கேட்.

''நேரா பாருடா", "கண்ண மூடாத", "பேய் மாதிரி இருக்க" "கொஞ்சமாச்சு சிரிடா"னு என்னை அதட்டி மிரட்டி, தங்கை ஃபோட்டோ எடுத்தாள். பொறுமையில்லாமல் நான் கோபப்பட , அம்மா சமாதானம் செய்ய 15 நிமிடம் கடந்தது தான் மிச்சம். ஒரு ஃபோட்டோ கூட தேறவில்லை. அடுத்து தங்கையையும் மாப்பிள்ளையையும் நிற்க வைத்து, நிறைய ஃபோட்டோ எடுத்தேன். ஃபோட்டோ எடுக்க என்னை அவர்கள் கட்டாயப்படுத்தினர் என்று தான் சொல்லணும். திருமணம் முடிஞ்சு 10 மாதமாகியும், 'புதுமண தம்பதி'னு அவர்களுக்கு நினைப்பு . நான் தான் பலிகடா.

"ஜஸ்ட் 50 ருப்பீஸ் சார் . டூ மினிட்ஸ்ல பிரிண்ட் போட்டு கொடுத்துடுறேன்"னு இளம் ஃபோட்டோகிராபர் ஒருவர் நச்சரித்துக் கொண்டே இருந்தார்.


நால்வரும் குரூப் ஃபோட்டோவுக்கு நின்றோம். 
தங்கை கண்ணை மூடியிருப்பாள், அம்மா சிரித்திருப்பார், நான் வேறெங்கோ பார்த்து கொண்டிருப்பேன்- இப்படி ஏதோ ஒரு காரணத்தால் ஃபோட்டோ எடுத்தபாடில்லை. 

25 நிமிடம் கடந்தது. 
நேரமாகியதால், 'வந்த வரை போதும்'னு ஃபோட்டோ ஷூட்டிங்கை முடித்துக்கொண்டோம். இந்த கார்ட்டூன் நெட்வொர்க் நிகழ்வுகள் அத்தனையையும், 2 வட இந்திய பெண்மணிகள் மிக அருகில் நின்று ரசித்துக்கொண்டிருந்தனர். தமிழ் புரியாவிட்டாலும் நடப்பதை புரிந்து கொண்டு சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால், நூற்றுக்கணக்கானவர்கள் வந்து போட்டோ எடுத்துக்கொண்டிருந்த அந்த இடத்தில், இந்த 2 பெண்கள் மட்டும் ஒரு ஃபோட்டோ கூட எடுத்துக்கொள்ளவில்லை.


"ஃபோட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும்" என்ற ஏக்கம் அவர்கள் கண்களில் இருந்ததை கவனித்தேன். தங்கள் வீட்டு சின்ன பையனை மட்டும் செல்ஃபோன் கேமராவில் ஃபோட்டோ எடுத்துவிட்டு கிளம்பினர். இந்த 2 பெண்கள் மட்டும் ஏன் ஃபோட்டோ எடுத்துக்கொள்ளவில்லை ?

**************************

2007ம் ஆண்டு. தஞ்சை.
தங்கைக்கு புடவை எடுக்க ஜவுளி கடைக்கு சென்றிருந்தேன்.
பெண்கள் பிரிவு. நீல புடவை ஒன்று கண்ணை பறிக்க, அதை நான் எடுக்க, இன்னோரு கையும் அதே புடவையை பிடித்தது. திரும்பி பார்த்தால் ஒரு பெண்.
''உங்களுக்கு வேணும்னா எடுத்துக்கோங்க''னு நான் விட்டுக்கொடுத்ததும், புடவைய எடுத்து விரித்து பார்த்தார். ஜமிக்கி ஜரிகை,மயில்,பூ.அழகிய வேலைப்பாடுகள். அவருக்கு அந்த புடவை ரொம்ப பிடிச்சு போயிருந்தது. அவர் கண்ணிலேயே தெரிந்தது. ஆனால் , 2 நிமிஷம் புடவையை ஏக்கமாக பார்த்துவிட்டு, ஏதும் சொல்லாமல் புடவைய வாங்காமல் அவர் கிளம்பிவிட்டார்.

விற்பனை பிரிவில் இருந்தவரிடம் நான் பேச ஆரம்பித்தேன்.
"அண்ணே விலை எவ்ளோ ?"
" 4500"

"விலை ஜாஸ்தினு அவங்க வாங்காம போயிட்டாங்களா ?"
"இவங்க கிட்ட நிறைய பணம் இருக்கும் தம்பி. பணம் இருந்து என்ன செய்ய ? விடிவில்லாம இருக்காங்களே."


புடவையை வாங்கி வந்தேன். தங்கை அந்த புடவை அணிந்த பொழுதெல்லாம் அந்த பெண்ணின் ஏக்கம் நினைவுக்கு வரும்.

*********************

மேலே சொன்ன 2 சம்பவத்துக்கும் ஒரு ஒற்றுமை - ஏக்கம். இந்தியா கேட்டில் சந்தித்த பெண்களுக்கு ஃபோட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஏக்கம். தஞ்சாவூரில் சந்தித்த பெண்ணுக்கு வேலைப்பாடு கொண்ட புடவை அணிய வேண்டும் என்ற ஏக்கம். 

ஏன் ? ஏன் இந்த ஏக்கம் ? 
ஃபோட்டோ எடுத்துக்கொள்ள வேண்டியது தானே . 
புடவை வாங்கிக்கொள்ள வேண்டியது தானே ? 
முடியாதே.
காரணம் ?

இந்த பெண்கள், தலை முதல் கால் வரை கருப்பு அங்கி அணிந்திருந்தார்கள்.
ஃபோட்டோ எடுத்தாலும் முகம் தெரியாது. 

புடவையில், வேலைப்பாடு இருந்தால் என்ன?இல்லாவிட்டால் என்ன ? வெளியே தெரியாது தானே.

மனுசனுக்காக தானே மதம் ?
மனுசங்க மனச சாவடிங்கனு தான் மதநூல்கள் சொல்லிக்கொடுக்கிறதா ?


- பாலாஜி.