ஹரியானாவில் , நாங்கள் தினமும் ஒரு கிராமத்திற்கு போய் மருத்துவ சிகிச்சை செய்கிறோம் (Health Subcentre clinic ). 
இன்று மதியம், ஒரு கிராமத்தில் நானும் இரண்டு பயிற்சி மருத்துவர்களும், OPD முறையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தோம்.

ஒரு வயதான அம்மா வந்து, "என் பொண்ணுக்கு மருந்து வேணும்"னு கேட்டாங்க."நோயாளி நேரில் வர வேண்டும் அவரை பரிசோதித்த பிறகே மருந்து கொடுப்போம்.பெண்ணை அழைத்து வாங்க"னு சொன்னதற்கு, "ரெண்டு நாள் முன்,என் பெண்ணுக்கு குழந்தை இறந்தே பிறந்தது,அவரால் இவ்வுளவு தூரம் வர முடியாது"னு சொன்னார்.

"குழந்தை இறந்தே பிறந்ததா ? ஏன் ? என்ன ஆச்சு ? நான் அவசியம் அவரை பரிசோதிக்க வேண்டும்.வாங்க உங்க வீட்டுக்கு போகலாம்"னு சொன்னேன்.
என்னை சுற்றி இருந்த கிராம மக்களுக்கு ஆச்சர்யம். எல்லாரும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தனர். எனக்கு என்னனு புரியலை .


"ஒரு வேளை வீடு ரொம்ப தொலைவா இருக்குமோ ? நடந்தே போகணும் .நான் அவசரபட்டு வாய் விட்டுடேனோ ?" பயம் வந்தது.கிராமத்தில் எப்படி இருந்தாலும் வீடுகள் நெருக்கமாதான் இருக்கும். சரி நடப்போம்னு கிளம்பினேன். 


நோயாளி ஒரு பெண். நான் தனியே பரிசோதிக்க முடியாது . அதனால் இரண்டு நர்சிங் மாணவிகள் மற்றும் அங்கிருந்த அந்த ஊர் ASHAவையும் அழைத்துக்கொண்டு நடந்தோம்.கொஞ்ச தூரத்தில வீடு வந்தது.அது ரொம்ப சின்ன வீடு. மிகவும் ஏழ்மையான குடும்பம். 


என்னை பார்த்ததும் அந்த வீட்டுல இருந்தவங்களுக்கு சந்தோசம். என்கிட்டே ரொம்ப மரியாதையா பேசுனாங்க. நாங்க தேடி வந்த பெண் இருட்டுல ,ஒரு கயித்து கட்டில்ல படுத்து இருந்தார். லைட்போடுங்க னு சொல்லி ,அந்த பெண்ணை பரிசோதிச்சேன். ஏற்கனவே இரண்டு முறை அபார்ஷன் ஆகி இருந்திருக்கு. அவங்களுக்கு thyroid பிரச்சனைனு கண்டுபிடிச்சு , பரிசோதனை செய்யணும் ,மருத்துவமனைக்கு வாங்கனு எழுதி கொடுத்தேன். 


ஒரு மாசத்துக்கு இரும்பு சத்து மாத்திரை கொடுத்தேன். வலி மாத்திரையும் கொடுத்தோம். நர்சிங் மாணவிகளிடம் ,அந்த பெண்ணிடம் எப்படி 'சுத்தமா இருக்கணும்'னு சொல்லி கொடுங்க சொன்னேன். "குழந்தை இறந்ததற்கு அந்த பெண் என்ன செய்வார் ?.அவர திட்டாதீங்க"னு வீட்ல இருந்தவங்களுக்கு அறிவுரை சொன்னேன். "அடுத்த குழந்தைய தள்ளி போடணும், கணவரோட 6 வாரம் சேரக்கூடாது"னு சொன்னேன்.ஒரே சிரிப்பு, வெக்கம்.அந்த வீட்டுல இருந்தவங்களுக்கு ரொம்ப சந்தோசம். நாங்க கிளம்பினோம்.

திரும்பி நடந்து வரும் வழியில் எனக்கு கொஞ்சம் குழப்பமா இருந்துச்சு,'குழந்தை இறந்திருக்கு ,ஆனா அந்த வீட்டு வயதான பெண்கள் வருத்தம் இல்லாம என்னிடம் அன்பா பேசினாங்களே எப்படி?
நான் கேட்காமலேயே கிராமவாசிகள் என்னிடம் சொன்னது :" சார் நீங்க டாக்டர். காலனியில இருக்குற அவங்க வீட்டுக்கு போனதே அவங்களுக்கு ரொம்ப சந்தோசம்".
'காலனி' 'காலனி' என்ற வார்த்தை அடிக்கடி என் காதில் விழுந்தது.

நான் டவுன்ஷிப்பில் வளர்ந்ததால் ஜாதி பிரச்சனை, தாழ்ந்த ஜாதி மக்களின் வலி பற்றி அதிகம் தெரியாது. கிராமத்துல தான் காலனினு தனியா ஒதுக்கி வெச்சுருக்காங்க.இல்ல இவங்களே ஒதுங்கி இருக்காங்களானு தெரியல..

நம்ம நாடே ஒருகாலத்துல காலனி நாடு தான்.ஆனா இப்போ யாராவது நம்மள "காலனி நாடு"னு சொன்னா கோபம் வரும். நாம இந்த நாட்டுல பிறந்ததுக்கு நாம என்ன தப்பு செஞ்சோம் ? அதே போல ஒருவர், குறிப்பிட்ட ஒரு ஜாதியில பிறந்ததுக்கு, அவர் என்ன தப்பு செஞ்சார் ? இப்படி பிரிச்சி பாக்குறவங்க எல்லாம் லூசுங்க.திருத்தவே முடியாதுனு தோணுச்சு.
எப்படி பார்த்தாலும் , "காலனி" என்ற சொல் அருவருப்பா இருக்கு.

2) போன மாசம் ஒரு நாள் பிரசவ வார்டில் வேலை செஞ்சுகிட்டு இருந்தேன்.மதியம் மூணு மணிய தாண்டிடுச்சு.பசி மயக்கம். ஒரு பாட்டி என்கிட்ட சிரிச்சுகிட்டே வந்து , ஸ்வீட் டப்பாவ நீட்டுனாங்க .மகளுக்கு குழந்தை பிறந்த சந்தோசம். வேகமா ஒரு பர்பிய கைல எடுத்து ,வாய்ல போட்டு முழுங்கிட்டேன்.இன்னொன்னு சாப்பிடணும் போல இருந்துச்சு.அவ்வுளவு இனிப்பு. பக்கத்துல இருந்த நர்ஸ் அம்மா, ஸ்வீட் வேணாம்னு சொல்லி இருக்காங்க. கை அழுக்கா இருக்கும். ரத்தக்கறை பட்டிருக்கும்.அவங்க ஸ்வீட் எடுக்காததுக்கு எத்தனையோ காரணம் இருக்கலாம்.உண்மை காரணம் என்னனு எனக்கு தெரியல.இந்த பாட்டி அழ ஆரம்பிச்சுட்டாங்க.எனக்கு ஒண்ணுமே புரியல.பக்கத்துல இருந்தவங்கள விசாரிச்சேன். அந்த பாட்டி 'தாழ்ந்த' ஜாதியாம் .

"நாம கீழ் ஜாதி.அதனால தான் நாம கொடுக்குற ஸ்வீட்டை மத்தவங்க எடுக்கலை"னு அழுறாங்க.பாவிங்களா.
குழந்தை பிறக்குறப்போ குழந்தை மட்டும் தான் அழணும். 60 வயசு பாட்டிய அழ வெக்குற நாம (நம்ம சமூகம்) உருப்புடுவோமா?

3) "இளையராஜாவை சங்கராச்சாரியார் தொட மறுத்தார்"னு செய்தி படிச்சேன். செய்தி உண்மையானு தெரியாது.
ஆனா கோவம் பொத்துகிட்டு வந்துச்சு. பல பேருக்கு அதே கோவம் வந்துருக்கும்.கோவத்த குறைச்சு அமைதிபடுத்துறதே அவரோட இசை தான். அவரையே அவமதிச்சு இருக்குறாங்க .
இலட்சக்கணக்கான மக்களை காயப்படுத்தி விட்டு , பூஜை செஞ்சா அந்த பாவத்தை போக்கிடலாம்னு வேதத்துல சொல்லி இருக்கா ?

"ஒரு பரதேசியால் ராஜாவை தொட முடியாது. பரதேசி கொடுத்து வெச்சது அவ்வுளவு தான் " னு twitterல ட்வீட் செய்தேன்.

"இளையராஜா வேற ஜாதி ,அதனால அவர் இசையை கேட்க மாட்டேன்"னு சொல்லி காதை மூடிக்கொள்வாங்களா ?
ஆஸ்கார் விருதுக்கு அனுப்பப்பட்ட 'நாயகன்' படத்துக்கு உயிர் கொடுத்ததே இளையராஜா தான் .

ஸ்ரீ ரங்கம் கோயில் தமிழ் நாட்டு பொக்கிஷம். அதே போல இசைஞானியும் தமிழ் நாட்டு பொக்கிஷம் . இந்த மாதிரி பொக்கிஷத்தை சேதப்படுத்துரவங்கள மனநல மருத்துவரிடம் தான் அனுப்ப வேண்டும் 

4) பிறக்கும் பொழுது, முதன் முதல் நாம பாக்குறது , நம்ம அம்மா முகம் கிடையாது.பிரசவம் பார்த்தவரின் முகம் தான்.
"நீங்க பிறந்த போது, பிரசவம் பார்த்தவர் யார் ? உதவி செஞ்ச செவிலியர் யார் ? அவர்கள் எந்த ஜாதி"னு தெரியுமா ? 
அவர் கீழ் ஜாதினு தெரியவந்தா, ஜாதி வெறி பிடிச்சவங்க என்ன செய்வாங்க ? அவங்க கண்ண அவங்களே நோண்டி எடுத்துடுவாங்களா ? 

# நம்ம நாடே ஒரு வளர்ந்து வருகிற நாடு தான் .அதாவது வளர்ந்த நாட்டினர் பார்வையில் , இந்தியர்கள் அத்துனை பேரும் கீழ் ஜாதியினர் தான் .

# ஒருவர் எந்த ஜாதி ? உசந்த ஜாதியா, தாழ்ந்த ஜாதியானு கண்டுபிடிக்க, உலகத்துல எந்த ஒரு ரத்த பரிசோதனையும் கிடையாது .

# போன தடவை உங்களுக்கோ, உங்க நெருங்கிய சொந்தத்துக்கோ அறுவை சிகிச்சை செய்த போது இரத்தம் ஏத்தி இருப்பாங்க. எந்த ஜாதி ரத்தம் ஏத்துனாங்க ? சொல்லுங்க பார்ப்போம்.  

# கவுண்டமணி ஒரு படத்துல சொல்லுவார்: "ரெண்டே ரெண்டு ஜாதி தான். ஒன்னு ஆண் ஜாதி,இன்னொன்னு பெண் ஜாதி ".
மருத்துவ ரீதியா இது ரெண்டு மட்டும் தான் .சிலருக்கு குறைபாடு இருக்கும்.அவ்வுளவு தான் .

நண்பர்கள் கிட்ட நான் சொல்வது: "நமக்கு ரெண்டு கை .ஒன்னு நாம வேலை செஞ்சு சாப்பிட.இன்னொன்னு அடுத்தவங்கள தூக்கி விட”. 


எல்லா ஜாதியினருக்கும் நோய் வரும். கஷ்டம் வரும். நாம தான் கை கொடுத்து தூக்கிவிடணும். கைக்கு கண்ணும் கிடையாது, 

ஜாதியும் தெரியாது. 

பொண்ணு கொடுக்க தான் ஜாதி பாக்குறீங்க. கை கொடுத்து தூக்கி விட கூட ஜாதி பார்க்கணுமா ?