டெல்லி - சென்னை விமானத்தில், என் பின் இருக்கையில் இருந்தவர் தமிழ் நாட்டுக்காரர். 35 வயது இருக்கும்.
பணிப்பெண் கேட்ட கேள்விக்கு அவர் பதில் சொல்லவில்லை . 

2 நிமிடம் பணிப்பெண் வற்புறுத்திக்கேட்டும் அவர் ஒன்றும் சொல்லாமல் , ஜன்னலைப் பார்த்து திரும்பிக் கொண்டார்..

அப்பொழுது தான் புரிந்தது - அந்த தமிழருக்கு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி இரண்டும் தெரியாது.
(தமிழ் நாட்டில் உள்ள ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கும், பணிப்பெண்ணின் ஆங்கிலம் புரிவது சற்று கடினம். speed,slang நமக்கு புதுசா இருக்கும்). 

பணிப்பெண்ணுக்கு தமிழ் தெரியாது.

அந்த தமிழரைப் பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது.
"அண்ணே உங்க டிக்கெட்டை கேக்குறாங்க"னு நான் சொன்னேன்.அவரும் சிரித்துக் கொண்டே டிக்கெட்டை (Boarding Pass) எடுத்துக் காண்பித்தார்.பணிப்பெண் டிக்கெட்டை பார்த்து உணவு வழங்கினார்.
அவமானத்தில் அந்த தமிழர் தலையை கூட மேலே தூக்கவில்லை. அந்த தமிழருடன் மேலும் 4 பேர் வந்திருந்தனர். அவர்களும் இதே நிலைமையில்.

பணிப்பெண்ணிடம் நான் கேட்டேன் : "இவர்கள் தமிழ்நாட்டிலிருந்து வருகிறார்கள்.ஆங்கிலம் மற்றும் ஹிந்தி இரண்டும் தெரியாது. உங்கள் குழுவில் யாருக்குமே தமிழ் தெரியாதா?"
'தெரியாது'னு பதில் சொன்னார்.

''அவசர காலத்தில் எப்படி தப்பிப்பதுனு நீங்க சொல்லிக் கொடுக்குற செய்முறை, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி இரண்டும் தெரியாதவர்களுக்கு எப்படி புரியும் ? தமிழ்நாட்டுக்கு போகிற விமானத்தில் தமிழ் தெரிந்த பணிப்பெண் ஒருவர் கூட இல்லையா? ஏன்?" என்று கேட்டதற்கு ,
"ஹிந்தி தேசிய மொழி. அதை எல்லாரும் தெரிஞ்சிக்கணும்" னு பதில் சொன்னார்..
பயங்கர கோவம் வந்தது..பொளிச்சுனு அரையலாம்னு தோணுச்சு.
"உங்களுக்கு இந்தியாவின் மொழி கொள்கை பற்றியோ, நேரு- இந்திரா காந்தி கொடுத்த வாக்குறுதி பற்றியோ தெரியவில்லை.நீங்க Complaint book கொண்டு வாங்க. நான் complaint செய்கிறேன்"னு சொன்னதும் , "வேண்டாம். வேண்டாம். நான் உங்களது கருத்தை தெரியபடுத்தி விடுகிறேன்"னு சொன்னார்.

வெட்கத்தில் அந்த பயணி தலை குனிந்தபடியே இருந்தார்.
அந்த தமிழருக்கு தெரிந்த ப்ளம்பர் வேலை, இந்த லிப்-ஸ்டிக் போட்ட ஏர் ஹோஸ்டசுக்கு தெரியாது. தெரியத்தேவையில்லை . ''எல்லாருக்கும் ப்ளம்பிங் வேலை தெரிந்திருக்க வேண்டும். இது கூட உங்களுக்கு தெரியலையா''னு ஒரு ப்ளம்பர் சொல்ல ஆரம்பிச்சா, "போடா லூசு"னு சொல்லிடுவோம் .

நமக்கு ஹிந்தி தெரியாதுனு வடஇந்தியர்களுக்குத் தெரியும் .
நமக்கு தெரிந்த மொழியில் (ஆங்கிலம் ) பேச ஆரம்பித்து விடுவார்கள். அது நாகரீகம். அந்த வடநாட்டினருக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்றால், அவருக்கு தெரிந்த சொற்ப ஆங்கிலத்தில் நம்மிடம் பேச ஆரம்பிப்பார் .நகைச்சுவை காட்சி அரங்கேறும் ..புதிய புதிய நட்புகள் உருவாகும்.

ஆனால் சிலர் வேண்டுமென்றே புரியாத மொழியில் திட்டினால், ஏன் சிரித்துப் பேசினால் கூட அவமானமாகத்தான் இருக்கும்.நான் பல நாட்கள் அனுபவித்திருக்கிறேன்.
சிலர் ஒன்று கூடி "கருப்பன் ,மதராசி"னு கிண்டல் செய்வார்கள். நம்மால் ஒன்றும் செய்ய இயலாது.

"Hindustan என்றால் ஹிந்தி தெரிந்தவர்கள் வாழும் நாடு"னு புது விளக்கம் தருவார்கள். 
"உங்க stateல தான் 'ஹிந்தி வேண்டாம்' னு சொன்னீங்களே, இப்போ எதுக்கு இங்க வறீங்க"னு கேட்பார்கள்.
படிக்காதவர்கள் மட்டுமில்லை,ரொம்ப படித்தவர்களும் இதை செய்வார்கள்.
அடுத்தவரை அவமானப்படுத்துவதில் அவர்களுக்கு தனி சந்தோஷம் இருக்கும் போல.  

"தேர்தல் நேரத்துல 40 சீட்டுக்காக பெரிய பெரிய தலை எல்லாம், எங்க தலைவர்களிடம் கால்ல வந்து விழுறாங்களே, ஏன் ?"னு கேட்க தோணும் .
சில நேரத்துல, "எங்கள பிரிச்சு விட்டுடுங்க"னு சொல்லத்தோணும். வேண்டாம். இந்தியா.இந்தியா.இந்தியர்கள். நாம் இந்தியர்கள். ம்ம் ..
ஆனால் இந்த பணிப்பெண், வயதில் இளையவர்...நிச்சயம் இவருக்கு மொழி பிரச்சனை பற்றியோ, அரசியலோ தெரிந்திருக்க வாய்ப்பிலை.

ஹிந்தி தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம் தான்.அதற்காக ஹிந்தி தெரியாதது குறைபாடு இல்லையே.
பைக் ஓட்ட தெரிந்து கொள்வது அவசியம் தான். அதுக்காக,பைக் ஓட்ட தெரியாத ஒருவர் அவசரத்துக்கு lift கொடுங்கனு கேட்டா, "பைக் ஓட்ட தெரியாதா?…ஹி ஹி ஹி... இது கூட தெரியாதா?" னு நக்கல் செய்வதும், "இப்பொழுதே நீ வண்டி ஓட்ட வேண்டும்” . 'இப்பொழுதே' னு கட்டாயப்படுத்துவதும் சரியா ? தேவை இருந்தால் அவராகவே 15 நாட்களில் வண்டி ஓட்ட கற்றுக் கொள்வார்.முடிந்தால் பைக் ஓட்ட சொல்லிக் கொடுங்கள்..சும்மா அடுத்தவங்களை ஓட்டாதீர்கள்.

விமானத்தை விட்டு இறங்கும் போது, விமானி எல்லாருக்கும் நன்றி சொல்வார். அவரிடம் இந்த பிரச்சனையை சொன்னேன்.
அவரது பதில்: "ஒவ்வொரு மாநிலத்திற்கும், ஒவ்வொரு விமானத்திற்க்கும் தனித்தனியே ஒருவரை நியமிக்க முடியாது."
நானும் விடாமல்,"மற்ற மாநிலத்தவர்களுக்கு ஹிந்தி தெரியும்.தமிழ்நாட்டில் அப்படி இல்லையே? நீங்கள் விமான நிலையத்தை விட்டு வெளியே சென்று பாருங்கள்.புரியும்"னு பதிலளித்தேன்.  
"Logistics பிரச்சனை.கவனிக்கிறோம்"னு மழுப்பினார். 

ஏர் ஹோஸ்டஸ் வேலைக்கு விளம்பரம் செய்யும் பொழுதே, இந்த இந்த மொழி தெரிந்தவர்களுக்கு தான் முன்னுரிமை னு தெரிவிச்சா என்ன ? அதில் தமிழையும் சேர்த்துக் கொள்ளலாமே. அவங்களுக்கு தேவை வெறும் அழகு (வெள்ளை) . 
ஏன் தமிழ்நாட்டில் அப்படி யாரும் 'அழகு' இல்லையா ? 

'அவர்'களுக்கு தில் இருந்தா,சென்னை சென்ட்ரலில் ,ஒரே ஒரு நாள், தமிழை தவிர்த்து வெறும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் அறிவிப்பு செய்யட்டும் பார்க்கலாம்.

சென்னை விமான நிலையத்தில் புகார் செய்தேன் . 
என்னை 'பிரிவினை வாதி' ,'மொழி வெறியன்' 'திராவிட அரசியல் பேசுகிறான்'னு சிலர் திட்ட ஆரம்பிப்பார்கள். என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளட்டும்.
நான் தமிழை வளர்க்க வந்தவன் கிடையாது.என்னால் அது முடியாது.இலக்கியம் இலக்கணம் எதுவும் தெரியாது. 
என் அருகில் இருப்பவர் அவமானப்படுகிறார் .கோபம் வந்தது ..உதவினேன். 'இது மறுமுறை நிகழக்கூடாது' னு எண்ணி ஒரு சின்ன புகார் செய்தேன். மற்றும் ஒரு email அனுப்பினேன். அவ்வளவே.
இது கூட செய்யலைனா,என் பெயர்:- 'அமரர்.கார்த்திக் பாலாஜி ,9th class Fail ‘ 











2 வருஷம் கழிச்சு படம் பாக்க தியேட்டருக்கு போனேன். 

நிஜ உலகத்த மறக்கடிச்சு கனவு உலகத்துக்கு கொண்டுபோகுற திரைக்கதை வசனம். ஒலியும் ஒளியும் சேர்ந்து இப்படி ஒரு மேஜிக் செய்யமுடியுமானு ஆச்சர்யம். ஒரு சண்டை இல்ல, ஒரு சொட்டு ரத்தம் இல்ல. குத்து பாட்டு, பஞ்ச் டயலாக்,டபுள் மீனிங்னு எதுவும் இல்ல. ஆனா 2 1/2 hrs entertainment. வெளிய வரும் எல்லார் மனசுலயும் சந்தோஷம். 10 வயசு குறைஞ்ச ஃபீலிங். 

Thanks to Maniratnam & his team.

(பொண்ணு பையன் வெச்சிருக்குற பெரியவங்க வையித்துல தான் லேசா புளி கரைசல்)





"டாக்டர்களே சிகரெட் பிடிக்கிறார்கள். குடிக்கிறார்கள்! ஏன் எங்கள மட்டும் குடிக்காதீங்கனு அட்வஸ் பண்றீங்க?”

“உண்மை தான். டாக்டர்கள் பலர் சிகரெட் பிடிக்கிறார்கள். பலருக்கு குடிப்பழக்கமும் இருக்கு. மறுக்கவில்லை. சிகரெட்டில் இருக்கும் நிகோடின் என்னும் வேதிப்பொருள் addiction (போதைக்கு அடிமையாக்கும் தன்மை) தன்மையுடையது. ஒரு முறை ஆரம்பித்துவிட்டால் நிறுத்துவது கடினம். மேலும் மேலும் தேவைப்படும். அதனால் தான் அந்த பழக்கத்தை ஆரம்பித்த பல மருத்துவர்களாலேயே அதை நிறுத்தமுடியவில்லை. ஆரம்பத்தில் ஒரு சிகரெட் குடிப்பவர்கள் நாளடைவில் நாளொன்றுக்கு ஒரு பாக்கெட் குடித்தாலும் போதாது. பத்தாது. மூளை இருக்கும் சில பகுதிகள் “இன்னும் வேண்டும் ! இன்னும் வேண்டும்” என்று அவனை கட்டாயப்படுத்தும். சிகரெட் அவ்வுளவு addicitive தன்மையுடையது.

சிகரெட் குடிப்பதால் ஏற்படும் மாரடைப்பு, புற்றுநோய் மற்றும் நுரையீரல் பாதிப்புகளால் பல மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். அதனால் தான் பல மருத்துவர்கள் இந்த புகைபழக்கத்தை நிறுத்த முயற்சி செய்கிறார்கள்.

சிகரெட் பழக்கம் என்பது ஒரு நோய். மூளையில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களால் ஏற்படுவது. இந்த நோய் மருத்துவர்களை மட்டுமல்ல, ஆசிரியர்கள், நீதிபதிகள், விஞ்ஞானிகள், அமைச்சர்கள், பிரதமர்கள், ஜனாதிபதிகள் என அனைவரையும் பாகுபாடில்லாமல் தாக்கும் சக்திபடைத்துள்ளது. சிகரெட் பிடிப்பதால் ஏற்படும் புற்றுநோய் மற்றும் மாரடைப்பு அனைவருக்கும் ஏற்படும். மருத்துவர்களுக்கும் வரும்.

அதனால் "மருத்துவர் குடிக்கிறார், நானும் குடிப்பேன்" என்பது வீண் வாதம். எல்லாருக்கும் ஒரே மாதிரி உடல், ஒரே ஒரு உயிர் தான். சிகரெட் பிடிப்பதை இன்றே நிறுத்த முயற்சி செய்யுங்கள். அருகில் உள்ள மனநல மருத்துவரை நாடுங்கள்”

- மரு.பாலாஜி




பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சர்வதேச முதலீட்டாளார்கள் மாநாடு சென்னையில் இன்று வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. 

"98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. உற்பத்தித்துறைக்கு ஒரு லட்சம் கோடி. மின்சக்திக்கு ஒரு லட்சம் கோடி. இன்னபிற துறைகளையும் சேர்த்து மொத்தம் 2.42 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் வரவிருக்கின்றன” என்று ஜெயா டிவியில், மாண்புமிகு... தமிழக முதல்வர்... இதய தெய்வம்…. புரட்சித்தலைவி…. டாக்டர்… அம்மா அவர்கள் பெருமிதமாய் பேசிக்கொண்டிருக்கிறார். இதையே மீண்டும் மீண்டும் ஒளிபரப்பிக்கொண்டிருக்கிறார்கள் முதல்வருக்கு தொடர்பேயில்லாத ஜெயா டிவியில்.

அதிகபட்சமாக நமக்கு இதுவரை தெரிஞ்சதே 2Gயின் 1.76 லட்சம் கோடி தான். அதவிட அதிகம் இந்த 2.4 லட்சம் கோடி.
"எதிர்பார்த்த இலக்கை விட ரெண்டு மடங்கு முதலீடு !
தன் இனிஷியலைப் போலவே முதல்வருக்கு இதிலும் மாபெரும் வெற்றி!” என "அம்மா" பெருமை பேசத்தோணும்.

"அடேய், லட்சம் கோடினு பேசுறீங்களே, இதெல்லாம் நடந்தா 10 வருஷத்துல நம்மூரும் சிங்கப்பூரா மாறிடுமே ! துபாய் மாதிரி பள பள தெருவுல சோத்த போட்டு சாப்பிடலாமே ! பேசாம 10,15 வருஷம் லேட்டா பொறந்திருக்கலாமோ"னு யோசிக்கத்தோணும்.

கொஞ்சம் வெய்ட்டீஸ்.
இந்த படத்தோட first half மட்டும் தான கேட்டிருக்கோம். கொஞ்சம் interval எடுத்துகிட்டு வாங்க. second Half ஐயும் பார்க்கலாம் !


மாநாட்டின் இன்னொரு முகம் :
********************************

1) “இது ஜெயா புகழ் பாடும் மாநாடு. ரெக்கார்ட் டான்ஸ் தான் நடைபெற்று வருகின்றது"னு ஈ.வீ.கே.எஸ் இளங்கோவன் தனக்கே உரிய கண்ணியமான முறையில் விமர்சித்துவிட்டார்.

எம்ஜிஆர் பாடலுக்கு அதிமுக பெண்கள் நடனமாடியதை திமுகவினர் “குத்தாட்டம்” என்று விமர்சித்து வருகிறார்கள். குத்தாட்டம் ஆடி அரியணை ஏறியவர்கள் பற்றிய வரலாறு திமுகவினருக்கு தெரியாதது அச்சர்யம் தான். சரி போகட்டும்.

இப்படியெல்லாம் கலை நிகழ்ச்சி நடத்தினாத்தானே வெளிநாட்டு investors குஷியாவாங்க. உடனே கோடிக்கோடியா கொட்டிக்கொடுப்பாங்க. தவிர, 3Dயில ரெக்கையோட குதிரை பறந்து வந்து அம்மா கால்ல விழந்ததுதானே ஹைலைட். அம்மாவும் அத வெகுவா ரசிச்சாங்களே. இதெல்லாம் இல்லாம, விழாவுக்கு ஒதுக்குன மக்கள் வரிப்பணம் 100 கோடி ரூபாய வேற எப்படி செலவழிக்கிறதாம்? சொல்லுங்க பார்ப்போம்?



2) மாநாட்டு ஏற்பாடுகளால் மூன்று நாட்களாக சென்னை நகரம் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவிட்டதாம். சென்னைவாசிகள் ட்விட்டரில் புலம்புகிறார்கள். இதெல்லாம் உங்களுக்கு புதுசா என்ன ? போக்குவரத்து நெரிசலா இருந்தா ஸ்கூலுக்கு லீவ போட்டு தூங்குங்க. இல்ல சூப்பர் சிங்கர் பாருங்க. silly fellows


3) "எந்த பதவியிலும் இல்லாத சசிகலா எப்படி இந்த சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளலாம்"னு ஃபேஸ்புக்கில் ஒருவர் கோபமாய் கேள்வி எழுப்பியுள்ளார்?
என்னது, சசிக்கும் அரசுக்கும் சம்பந்தமில்லையா?
Tamil Nadu என்ற பெயரை TASMAC NADU என்று மாற்றி அமைப்பதில் உயிர்த்தோழியோட பங்கு பற்றி தெரியாதவரா இருப்பார் போலும். இதுவே பழைய மேடமா இருந்திருந்தா இந்நேரம் அவருக்கு flipkart மூலம் கஞ்சா வழக்கு பார்சல் கிடைத்திருக்கும். be careful தம்பி.



4) ஊர் முழுக்க அம்மா பேனர் கட்டியிருக்காங்க. "தங்கத்தாரகையை பாராட்டி மெட்ரோ தூண் முழுக்க பதாகைகள் கட்டியுள்ளார்கள்"னு ஒருவர் ஆதங்கப்படுகிறார். ஹலோ சார், மெட்ரோவையே "அம்மா மெட்ரோ"னு பேர் மாத்தலாம்னு யோசிச்சுகிட்டிருக்கோம். நீங்க என்னன்னா..



5) எல்லாரும் இவ்வுளவு யோசிக்குறாங்களேனு நானும் கொஞ்சம் யோசிச்சேன். "தமிழகத்தில் நடக்கும் சர்வதேச மாநாட்டில் கேரளாவின் செண்டை மேளம் எதற்கு?" யோசிச்சேன். கேரள நடிகைகள் கோலிவுட்டில் ஊடுறுவியதைப்போலவே,கேரள ஐஏஎஸ் அதிகாரிகள் தமிழக அதிகார மையங்களில் ஊடுறுவியதைப்போலவே, கேரள கலச்சாரமும் இங்கே ஊடுறுவியிருக்கிறது. இதில் என்ன ஆச்சர்யம்?னு எனக்கு நானே விடைதேடிக்கிட்டேன்.


காமெடியெல்லாம் போதும்.
இந்த மாநாட்டைப்பற்றி சீரியஸா சில விஷயங்கள் பேசணும்.


1) நாலு வருஷம் நல்லா ஆட்சிக்கட்டிலில் படுத்து குறட்ட விட்டு தூங்கிட்டு, தேர்தல் வரப்போகும் கடைசி நேரத்துல மாநாடு நடத்த வேண்டிய அவசியம் என்ன?
தேர்தல் நாடகமா இது?
ஏன் "தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிக்க வேண்டும்” ?
"சாகும் தருவாயில் சங்கரா சங்கரா சங்கரா” எதற்கு?
இதை யாரிடம் கேட்பது?
நாஞ்சில் சம்பத் இதற்கு ஏற்கனவே பதில் சொல்லிவிட்டார்: “புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களுக்கு எப்பொழுது எதை செய்ய வேண்டும் என்பது நன்றாகத் தெரியும். அம்மாவுக்காகத்தான் இவ்வுளவு நாள் காத்திருந்தோம். மக்களும் காத்திருக்கட்டுமே? இதிலென்ன தவறு? ”
எந்த தப்பும் இல்லை சார்.
நாங்க தான் தப்பு பண்ணிட்டோம்.



2) இன்று 98 Memorandum of Understanding (MoUs) 
கையெழுத்தாகியுள்ளத, இதெல்லாமே implement ஆகுமா? சந்தேகம் தான்.
எப்பொழுது செயல் வடிவத்திற்கு வரும் ? தெரியாது.
இதற்கெல்லாம் ஏதாவது timeline உள்ளதா ? தெரியாது.

2012ல், தமிழக அரசு -தனியார் நிறுவங்களுக்கிடையே 21 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், அதில் 524 கோடி ரூ மட்டுமே செயலாக்கத்துக்கு வந்துள்ளது (overall implementation rate) . இது வெறும் 2.4 %.
http://dipp.nic.in/English/Publications/SIA_Statistics/2015/aug2015/chapter1.5.pdf .
இப்படியாக, 2011முதல் 2015 ஜூலை வரை அதிமுக அரசால் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் செயலாக்கத்துக்கு வந்துள்ள முதலீடு வெறும் 5.64 %. புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கும், உண்மையிலேயே செயலாக்கத்துக்கு வரும் முதலீடுகளின் அளவுக்கும் மிகப்பெரிய இடைவெளி இருப்பது கவலை கொள்ள வேண்டிய ஒன்று. இதே நிலை தொடருமானால், 2 லட்சம் கோடியில் செயலாக்கத்துக்கு வரவிருப்பது, வெறும் பத்தாயிரம் கோடி ரூ தான்.



3) திமுக தலைவர் கலைஞரின் இன்றைய அறிக்கையிலிருந்து, இன்னொரு முக்கியமான கேள்வி எழுகிறது: -

“தமிழ்நாடு பெட்ரோ-ப்ராடக்ட்ஸ்”, “திருச்சி டிஸ்டிலரீஸ்”, “தூத்துக்குடி அல்கலின் கெமிகல்ஸ்” ஆகியவை மூடப்பட்டு விட்டன.
“இசுஸு” ஆந்திராவுக்குச் சென்றுவிட்டது.
“செயின்ட் கோபைன்"னின் 1000 கோடி ரூ விரிவாக்க ஆலை ராஜஸ்தானுக்குச் சென்று விட்டது.
ராம்கோ சிமெண்ட் தனது தொழிற்சாலையை ஆந்திராவில் அமைக்க இருக்கிறது.

- இங்கிருக்கும் தொழிற்சாலைகளையே தக்க வைக்க முடியவில்லை. அதை சரி செய்யாமல் புத்துப்புது ஒப்பந்தங்கள் போடுவதால் என்ன பயன்?
"கூரை ஏறிக் கோழி புடிக்காதவன் வானம் ஏறி வைகுந்தம் போனானாம்”
வரப்போகும் நிறுவனமும் இதே போல் ஓடிவிட்டால்?



4) தொழில் தொடங்க 30 நாளில் அனுமதி வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் சொல்லியிருக்கிறார். இந்த வாக்குறுதி மட்டும் போதுமா? தனியார் நிறுவனம் தமிழகத்தில் தொழில் துவங்க மத்திய அரசின் பல துறைகளிலிருந்தும் அனுமதி தேவை. மாநாட்டில், தமிழக முதல்வர் மோடியை வெகுவாக பாராட்டியதற்கும், மத்திய அமைச்சர் பொன் ராதாகிஷ்ணனின் ஒத்துழைப்பை நாடியதற்கும் இதுவே காரணம். ஆக, அதிமுக- பாஜக என்னும் இரண்டு காளைகளும் ஒருசேர ஒத்துழைத்தால் தான் இந்த டயர் வண்டியை முன்னே நகர்த்த முடியும். நாளையே தேர்தல் பங்கீட்டில் பிரச்சனை ஏற்பட்டாலோ, பழையபடி வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிவிட்டாலோ, மத்தியில் உள்ள பாஜக அரசு, தமிழக அரசால் கொண்டுவரப்படும் நிறுவனங்களுக்கு முட்டுக்கட்டை போடாமலா இருக்கும்?


எது எப்படியோ. மோடி எப்படி “Make in India” என்று வித்தைகாட்டி மார்க்கெட்டிங் செய்தாரோ, அதே போல் நம் முதல்வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி மார்க்கெட்டிங் செய்ய முயற்சி செய்துள்ளார். அதில் பெருமளவு வெற்றியும் பெற்றுள்ளார். இந்த திட்டங்கள் எந்தளவிற்கு நடைமுறைப்படுத்தப்பட்டு தமிழகத்தில் தொழில்வளம் பெருகும் என்பதை தேர்தல் முடிவுகள் தான் தீர்மானிக்கும்.


- உண்மையுடன், 
பாலாஜி
























































திமுகவின் திருச்சி மாநாடு 
***********************


நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து, கேரள இசைக்கலைஞர்களின் வாத்திய இசை முழங்க திராவிட முன்னேற்றக் கழகத்தின் 10வது மாநில மாநாடு துவங்கியது.

குலம், கோத்திரத்தை ஒழிக்க போராடிய தந்தை பெரியாரின் வழித்தோன்றலான திரு.கி.வீரமணி அவர்கள்,"எங்கள் குலத்தலைவர் கலைஞர் அவர்களே!" என பகுத்தறிவு துதி பாடினார். 

2 ஜி வழக்கில், 'திமுகவினர் எங்கே தன் பெயரையும் போட்டுக் கொடுத்துவிடுவார்களோ' என ஏற்கனவே பயந்துபோயுள்ள இந்த நேரத்தில், "பிரதமரை கைகாட்டும் பொறுப்பு கருணாநிதிக்கு உள்ளது" என திரு.தொல்.திருமாவளவன் பேசியுள்ளது நிச்சயம் பிரதமரை கிலியூட்டத்தான் செய்யும்.

மாநாட்டுத்திடலில், திமுகவின் ஒரே பெண் பேச்சாளரும், திமுகவின் கொ.ப.செ.வாக கருத்தப்படுபவருமான நடிகை.குஷ்பு, "ஆணாதிக்கத்திலிருந்து விடுதலை வாங்கி கொடுத்த பெரியார், இந்த திருச்சி மண்ணில்தான் பிறந்தார்" எனப்பேசி இன்று ஒரு புதிய வரலாறு படைத்தார்.

"ஹார்லிக்ஸ்" புகழ் அஞ்சாநெஞ்சனின் வரவு இல்லாதது பெரிய குறை தான். ஆனால் அவர் கற்றுக்கொடுத்த டெக்னிக்படி டாஸ்மாக் பாட்டில்கள் திருடப்பட்டு கட்சிக்கு பெருமை சேர்த்துவிட்டனர் நம் உடன்பிறப்புகள்.

மாநாட்டினால் உற்சாகம் அடைந்தவர்களைக்காட்டிலும், உற்சாக பானத்தினால் குஷியடைந்தவர்கள் தான் மாநாட்டுத்திடலில் அதிகமாக இருந்தார்களாம்.

திராவிட மாநாடுகளில், தொண்டர்களின் சோர்வைப்போக்க ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால் இன்றை காலத்தில், கட்சியினருக்கு Action காட்சிகளும் தேவைப்படுகிறது போலும். நிறைய அடிதடிகள் நடந்தேறியுள்ளது. ஒரு முன்னாள் அமைச்சரே, கேப்டன் பாணியில் வேட்டியை மடித்துக்கட்டி, களத்தில் இறங்கி ஒரு தொண்டனுக்கு அறைவிட்டது தான் இந்த மாநாட்டின் Highlight.

இன்று நடந்தது திமுகவின் மாநில மாநாடா அல்லது திரு.மு.க.ஸ்டாலினின் முடிசூட்டு விழாவா என்று பட்டிமன்றம் எல்லாம் நடத்தத் தேவையில்லை. தலைவர் அதை தெளிவாகவே உணர்த்திவிட்டார். அடுத்த தலைவரான திரு.ஸ்டாலினும், வழக்கம் போல் இல்லாமல், "தமிழகத்தில் நடப்பது அடங்கா பிடாரி ஆட்சி" என சற்று காரமாகவே பேசியுள்ளார்.

யாரும் எதிர்பாராத வகையில், திரு.தயாநிதி மாறனும் ஆவேசமாக, "ஜெயலலிதாவே உன் கனவு பலிக்குமா? நீ பிரதமராக வேண்டும் என்ற கனவு பலிக்குமா? இந்தக் கூட்டத்தை பார்த்த பிறகாவது திருத்திக்கொள். உனது கனவு பலிக்காது" என்று முதல்வரை ஒருமையில் பேசி, தானும் திமுகவை சேர்ந்தவர் தான் என்பதை நிரூபித்துவிட்டார்.

"சேது சமுத்திரத்திட்டம்", "கச்சத்தீவு", "ஈழத் தமிழர் பிரச்சினை", "நதிநீர் தேசியமயம்" போன்ற புளித்துப்போன பழைய கள்ளையே தீர்மானமாக நிறைவேற்றியுள்ளனர். அதுவும், இந்த 'சேது திட்டம்' 'சேது திட்டம்'னு பேசிப்பேசியே கட்சியினரை "சேது"வாக்கிவிடுவார் நம்ம தலைவர்.

மாநாட்டில் தி.மு.க.விற்கு வசூலான மொத்த தேர்தல் நிதி 106 கோடி ரூபாயாம் ! 

இவ்வுளவு கருப்புப்பணத்தை வெள்ளையாக மாற்ற உதவியதைத் தவிற, உருப்பிடியான வேறு எந்த ஒரு பலனும் இந்த திருப்புமுனை மாநாட்டினால் கட்சிக்கு ஏற்படப்போவதில்லை.

- பாலாஜி.






சில நாட்களுக்கு முன், ஒரு பத்திரிக்கை, தமிழகத்தின் பல இடங்களில் சர்வே ஒன்றை நடத்தியிருக்கிறது. அதில் ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துவிட்டு சென்றுள்ளனர்.

என்ன சர்வே அது ?
"தமிழக அரசின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கிறதா இல்லையா" என தெரிந்து கொள்வதற்காக நடத்தப்பட்ட சர்வேயா ?
இல்லை.

"பூரண மதுவிலக்கை அமல்படுத்தலாமா கூடாதா" என்ற சர்வேயா ?
இல்லை.

"இந்தியாவிற்கு அணுவுலை தேவையா இல்லையா?" என்ற சர்வேயா ?
இல்லை.

"குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவது சரியா தவறா" என்ற சர்வேயா ?
இல்லை.

"தமிழகத்தின் முக்கியமான பிரச்சனை எது" என தெரிந்து கொள்வதற்காக நடத்தப்பட்ட சர்வேயா ?
இல்லை

"வரும் நாடாளுமன்றத்தேர்தலில் எந்த கட்சிக்கு வாக்களிப்பீர்கள்" என்ற அரசியல் சர்வேயா ?
இல்லை.
இல்லவே இல்லை.

வேறு எதற்காகத்தான் இந்த சர்வே நடத்தப்பட்டது ? 
வேறு எதற்காக... "அடுத்த சூப்பர் ஸ்டார் யார்?" என தெரிந்துகொள்வதற்காக நடத்தப்பட்ட சர்வே தான் இது.
தமிழகத்தின் முக்கியமான பிரச்சனையா இது ? 
இதற்கெல்லாம் ஒரு சர்வே. 


இதற்காக பலர், தங்கள் நேரத்தை வீணடித்துவிட்டு வந்து அஜித்,விஜய்,தனுஷ் என வாக்களித்து விட்டு சென்றுள்ளனர். இந்த சர்வேயால் யாருக்கு என்ன பலன் ? 

இன்னும் எத்தனைக் காலத்திற்கு தான் நாம் சினிமா நடிகர்களுக்கு அடிமையாக இருக்கப்போகிறோமோ ?





NDTVயின் இணையதளத்தில் வெளியாகியுள்ள கட்டுரையில், தமிழகத்தில் உள்ள மாணவர்கள் ஹிந்தி படிக்க விரும்புவதாகவும், அதற்கு இங்கு வழி இல்லாததாகவும், அதனால் பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த கட்டுரையை எழுதியிருப்பவர் திரு.ஸாம் டேனியல் என்னும் NDTV நிருபர். அவரிடம் சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன் :

தமிழகத்தில் ஹிந்தி படிக்க வழியில்லையா என்ன ? 

இங்கே உள்ள அத்துனை சிபிஎஸ்ஸி பள்ளிகளிலும் ஹிந்தி கற்பிக்கப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா தெரியாதா ? 

வெளிமாநிலத்திலிருந்து வந்துள்ள பெற்றோர்கள் தமிழக அரசிற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்கள் என்று சொல்லியுள்ளீர்கள்.எத்துனை பேர் வழக்கு தொடுத்துள்ளார்கள் ? வழக்கு என்னவாயிற்று ? 

"ஐய்யோ கொடுமை, ஹிந்திக்கு இழைக்கப்படும் அநீதி" என்கிற ரீதியில் வருத்தப்படுகிறீர்களே, இங்கிருந்து சென்று டெல்லியில் வாழ்பவர்களின் குழந்தைகள் தமிழ் படிக்க விரும்பினால் எத்துனை வாய்ப்புகள் உள்ளன ? அ


தே அங்கிருந்து வந்து இங்கே வாழ்பவர்களின் குழந்தைகள் ஹிந்தி படிக்க எத்துனை வாய்ப்புகள் உள்ளன ? 

சரி, இங்கே, "எங்களுக்கு தமிழ் வேண்டாம், ஹிந்தி மட்டுமே படிக்க விரும்புகிறோம்" என்று சொல்லும் மாணவர்கள் எத்துனை சதவிகிதம் ? அவர்களை ஹிந்தி படிக்கவிடாமல் யாராவது தடுக்கிறார்களா ? 

ஹிந்தி பிரச்சார சபா என்று ஒன்று உள்ளது உங்களுக்கு தெரியுமா தெரியாதா ? அங்கே ஹிந்தி படிக்க பல உதவிகள் கிடைக்கிறதே ? 

ஆனால், டெல்லியில் எத்தனை பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது என்பதை உங்களால சொல்ல முடியுமா ? 

தமிழகத்தில் பல தனியார் பள்ளிகளில் தமிழே சொல்லிக்கொடுப்பதில்லை என்பது உங்களுக்கு தெரியுமா தெரியாதா ? 


+2வில் தமிழ் படிக்காமலேயே ஒருவர் தேர்ச்சி பெற முடியும். ஆனால், டெல்லியில் ஹிந்தி படிக்காமல் யாராவது தேர்ச்சி பெற முடியுமா ? 

தமிழகத்தில் அரசு பள்ளிகளிலும், தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளிகளிலும் மட்டுமே தமிழ் கட்டாயம். இதில் என்ன தவறு இருக்கிறது ?

நீங்கள் சார்ந்திருக்கும் வடக்கிந்திய தொலைக்காட்சி என்ன எழுத சொன்னாலும் அதை அப்படியே எழுதுவீர்களா ? யோசியுங்கள் . 


உங்கள் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு முதலில் தமிழகத்தின் முழுமையான வரைபடம் இருக்கிறதா இல்லையா என்று எங்களுக்கு ஒரு சந்தேகம் உள்ளது. காரணம், சிவகாசி வெடிவிபத்து நடந்தபொழுது, வரைபடத்தில் சென்னையைக் கோடிட்டு காட்டியவர்கள் தானே உங்கள் நிறுவனம். 

"மெட்றாஸ்" மட்டும் தான் தமிழகத்தின் அடையாளமா ?

கடைசியாக ஒன்று. 

பசிக்காக எலும்புத்துண்டை கவ்விக்கொண்டிருப்பது அவரரவர் விருப்பம். ஆனால் எலும்பைக் கவ்விக்கொண்டே இங்கே வந்து ஊளையிட முயற்சிப்பது கூடாது. நன்றி விசுவாசத்திற்காக சோறு போடுவர்களுக்கு வாலாட்டலாம். தப்பில்லை. ஆனால், அதே வாலை எங்களிடம் காட்டினால் ஜாக்கிரதை...ஒட்ட நறுக்கிவிடுவோம். 

-பாலாஜி.