ஒவ்வொரு முறை இலவச மருத்துவமுகாம்களில் பங்கெடுத்துவிட்டு வரும் பொழுதும், "நிறைய ஏழை நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்துவிட்டோம்", "நிறைய நோய்களை கண்டறிந்து மருந்துகளை பரிந்துரைத்துவிட்டோம்" என்ற மனநிறைவோடு திரும்பி வருவேன். 

ஆனால், கடந்த 2 நாட்களாக, சரியான சாலை வசதி இல்லாத, சில தமிழகக்கடலோர கிராமங்களில் நடத்தப்பட்ட மருத்துவ முகாம்களில் பங்கெடுத்துவிட்டு திரும்பி வந்ததிலிருந்து, மனதில் ஏதோ ஒரு சோகம் கவ்வியுள்ளது. 

பெரும்பாலான நோயாளிகள் உப்பளத்தில் பணிபுரியும் தொழிலாளிகள். இரவு பகலாக நீண்ட நேரம் சுடுநீரில் நிற்க வேண்டிய பணி அவர்களுக்கு. இதுவரை பார்த்திராத நோய்களை அவர்களிடம் கண்டேன். 

சிலரது காயங்கள், உப்பு கிழித்ததால் உண்டான கீறல்கள் என்பதையே நம்பமுடியாத அளவிற்கு ஆழமாக இருந்தது. தங்களது ரத்தம் உறிஞ்சப்படுகிறது என்பதை அறியாமலேயே, முதலாளிகளுக்கு லாபம் தேடித்தந்து கொண்டிருகிறார்கள். பரதேசி படத்தில் ஆங்கிலேய கால தேயிலை தோட்டத்தொழிலாளிகளின் அடிமை வாழ்க்கை காண்பிக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவிலும் அதே போன்றதொரு கொடுமையை உப்பளத் தொழிலாளிகள் அனுபவிக்கிறார்கள் என்பதே உண்மை. 

நாம் சாப்பிடும் உப்பில் அவர்களது வியர்வை மட்டுமல்ல, ரத்தமும் கலந்திருக்கு.

- பாலாஜி