கோயிலிலும் பூஜை அறையிலும் இருக்க வேண்டியவரை, வீதிக்கு வீதி மெகா சைஸ் களிமண் சிலைகளாக உட்கார வைத்துவிட்டனர். பாகுபலி முதல் செல்ஃபி பிள்ளையார் வரை ட்ரெண்டுக்கு தகுந்தார் போல் விதவிதமாக வினாயகர் செய்து விற்கிறார்கள். நேற்று கடைத்தெருவில், புத்தம் புதிய சிலைகளின் கழுத்தில்,”For Sale, Contact …….” என்று எழுதி தொங்கவிடப்பட்டிருந்தது. இன்று அத்துனை சிலைகளும் விற்றுத்தீர்ந்துவிட்டது. சிலை செய்பவர்களுக்கு நல்ல வியாபாரம். சரி, அது அவர்களது தொழில், உழைப்பு. தவறில்லை, விட்டுவிடலாம். ஆனால், ஐந்தாறு ஆட்கள் லுங்கியுடன் கூட்டமாக சென்று, இந்த மெகா சைஸ் சிலைகளை வாங்கி, டெம்போ வேனில் ஏற்றிக்கொண்டு வந்து, முட்டுச்சந்தில் இறக்கி வைத்து, லவுட் ஸ்பீக்கர் கட்டி ஹை டெசிபலில் பாட்டைப்போட்டு, வேட்டும் வைத்து தெருவையே அலற விடுவது ஏன்?

"எல்லா பக்தர்களும் தரிசனம் செய்யவே வீதிக்கு வீதி வினாயகர் சிலை வைக்கிறோம், வீதி உலா கொண்டு போகிறோம்"னு காரணம் சொல்பவர்கள், அந்த சிலைகளை ஏன் சேரி வழியாக கொண்டு செல்வதில்லை? சேரியிலும் வினாயகரின் பக்தர்கள் இருக்கிறார்களே?

"முஸ்லிம்கள் வசிக்கும் தெருக்கள் வழியாத்தான் போவேன்"னு பிள்ளையார் யாரிடமாவது ரூட் மேப் போட்டுக்கொடுத்தாரா?

40 பக்க நோட்டை கையில் வைத்துக்கொண்டு வீடு வீடா போய் வசூல் செய்யும் பணத்துக்கு ஏதாவது வரவு செலவு கணக்கு உள்ளதா? இதனை யார் நிர்வகிக்கிறார்கள்? அவர்களது முழு நேர தொழில் தான் என்ன?

ஊர்வலத்தில் சிலைக்கு அருகில் உட்கார்ந்திருக்கும் அந்த திடீர் பூசாரிகள் யார்? ஐந்து சிலைக்கு ஒரு பூசாரி என்று வைத்துக்கொண்டாலும், நம்மூரில் வீதிக்கு வீதி வைக்கப்படும் சிலைகளுக்கு ஈடாக அவ்வுளவு பூசாரிகள் இருக்கிறார்களா என்ன?

ஊர்வலத்தில், வினாயகருக்கு முன்னே காவித்துண்டை தலையில் கட்டிக்கொண்டு முழுபோதையில் குத்தாட்டம் ஆடும் இளைஞர்கள் யார்? பக்தர்களா? சவ ஊர்வலத்திற்கும் வினாயகர் ஊர்வலத்திற்கும் வித்யாசம் தெரியாத அளவிற்கு ஏன் இந்த ஆட்டம்? இவர்களுக்கு மத போதையும் மது போதையும் ஊட்டுபவர்கள் யார்?

'பெரியார், கடவுள் சிலைகளை உடைத்தார்’னு அவர் மேல் கோபப்படும் நீங்கள், கடற்கரைகளில் கிரேன்கள் உதவியுடன் அதைத்தானே செய்கிறீர்கள். அவர் செய்தால் தப்பு, நீங்கள் செய்தால் பக்தியா?

தப்பு செய்தால் கடவுள் தண்டிப்பார் என்றும், துரோகம் செய்பவர்களை கடவுளே பார்த்துக்கொள்வார் என்றும் பெரும்பாலானவர்கள் நம்புவதால் தான், இந்த உலகத்தில் கொலை கொள்ளை போன்ற கொடிய குற்றங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் அந்த நம்பிக்கையையே முலதனமாக்கி வியாபாரம் செய்யத்தொடங்கியுள்ளார்கள். அரசியல் செய்கிறார்கள், ஆட்சியைப்பிடித்துள்ளார்கள். அவர்களின் வசதிக்காகவே நம்மையும் மூடநம்பிக்கை குழியில் தள்ளிவிடத்துடிக்கிறார்கள். கடவுள் நம்பிக்கைக்கும் மூட நம்பிக்கைக்கும் உள்ள வித்யாசத்தை கண்டுகொள்வோம். அதுவே பகுத்தறிவு.

ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ் பிள்ளையார்களுக்கு செய்யப்படும் பாலபிஷேகமும் தேன் அபிஷேகமும் 'கடவுள் பக்தி' என நம்புபவர்கள், அந்த சிலைகளுக்கு முன் வைக்கப்படும் உண்டியலைத்திறப்பது யார் என்று ஒரு முறை கவனித்துப்பாருங்கள்.

- பாலாஜி