Tomorrow never dies - 1997 வாக்கில் வெளிவந்த இந்த James Bond படம் நியாபகம் இருக்கா ? 

"2 நாட்டுக்கு இடையே போர் மூளவேண்டும், அதை முதன் முதலில் செய்தியாக வெளியிட்டு லாபம் சம்பாதிக்க வேணும்"னு சூழ்ச்சி செய்யும் ஒரு செய்தி தொலைக்காட்சி/ பத்திரிக்கை அதிபர், ஒரு நாட்டின் கப்பலை மூழ்கடிக்க திட்டம் தீட்டுவார். 

எதிரி நாடு கோபப்பட்டு போர் தொடுக்கும்,செய்தியாக்கலாம், நிறுவனம் பிரபலமாகும், நம்பர் 1 இடத்தை பிடிக்கலாம்னு எண்ணம். வில்லனின் இந்த திட்டத்தை முறியடிப்பதே நம்ம james bondன் வேலை. 

இப்படியெல்லாம் நடக்குமானு ஆச்சர்யமா இருந்தது. காரணம் அந்த காலகட்டத்துல தனியார் சேனல்கள் அவ்வுளவா கிடையாது. 


ஆனா, இன்னைக்கு இந்த வகை சதி செயல்கள் நடந்து கொண்டுதானிருக்கு. எலும்பு துண்டுக்கு ஆசைப்படும் ஊடகத்துறையை சேர்ந்தவர்கள் இதை செம்மையாக செய்கிறார்கள். இன்று நடந்த நிகழ்வுகள் இதனை உறுதிப்படுத்துகிறது.

அலுவலகத்திலிருந்து மதியம் 1.30 மணிக்கு வீடு வந்து சேர்ந்தேன்.
"தமிழக முன்னாள் முதல்வர் ஜெ அவர்களின் சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்பு" தொடர்பாக, 2 மணியிலிருந்து இரவு 8 மணி வரை தொடர்ச்சியாக பார்த்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பற்றி என் மனதுக்கு தோன்றியதை இங்கே எழுதுகிறேன் :-

1) 'தன் சேனல் தான் முதன் முதலில் தீர்ப்பை பற்றிய தகவல் வழங்க வேண்டும்' என்கிற முனைப்பு எல்லா தொலைக்காட்சிக்கும் இருந்தது. தவறில்லை. ஆனால், அதை அறிவித்த விதம் தான் உறுத்தலாக இருந்தது.

மிரட்டலான ஒலியுடன் "Flash News” என்று போட்டு “ஜெ குற்றவாளி” என்று அறிவிப்பு செய்கிறார்கள். கூடவே "இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை" என்றும் அறிவிப்பு செய்கிறார்கள். "உறுதி செய்யப்படாத தகவல்”, "உறுதி செய்யப்படாத தகவல்" என்பதை மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள். அதிலும் “படாத” என்பதை அழுத்தி அழுத்தி சொல்லி, நம்மை படாத பாடு படுத்திவிட்டார்கள்.
ஏன் இந்த குழப்பம் ?
தவறா செய்தி வெளியிட்டா "மம்மி வழக்கு போடும்”நு பயம்.
ஆனா, முதல்ல அறிவிப்பு செஞ்சா தானே பரபரப்பு கிடைக்கும். விளம்பரம்.பணம். லாபம்.எலும்புத்துண்டு எல்லாம்.
மக்களை குழப்பியடித்தார்கள்.

2) வன்முறை சம்பவங்களை ஒளிபரப்பிய விதம் கண்டிக்கப்பட வேண்டியது.

2.30 மணிவாக்கில் எங்கேயாவது வன்முறை நடைபெறாதா ? அதை படமாக்க வேண்டுமே, ஒளிபரப்ப வேண்டுமே என்கிற முனைப்பு எல்லா தொலைக்காட்சிக்கும் இருந்தது அப்பட்டமாய் தெரிந்தது. 


சும்மா நிற்பவர்களிடம் போய் கேமராவை நீட்டுகிறார்கள். மக்களும் ,'காமிராவில் முகம் தெரிய வேண்டும்' என்பதற்காகவே உடனே கூச்சல் போடுகிறார்கள். 

ஒருவரை பேட்டியெடுக்கும் பொழுது சுத்தி நிற்பவர்கள் சிரித்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் பக்கம் கேமராவை திருப்பும் பொழுது ஆவேசமாய் பேசுகிறார்கள். செயற்கைத்தனம் பளிச்சென்று வெளிப்பட்டது..

சில இடங்களில் கல்வீச்சு கடையடைப்பு போன்ற சம்பவங்கள் நடைபெற்றது உண்மை தான். ஆனால் அதை இவர்கள் ஊதி ஊதி ஊதி பெரிதுபடுத்தினார்கள். 

ஒரு இடத்தில் நடைபெற்ற உருவபொம்மை எரிப்பு சம்பவத்தை ஒரு தொலைக்காட்சி 3 மணி நேரம் திரும்ப திரும்ப காண்பித்து "தமிழகம் கலவர பூமியானது" என்று Flash News வெளியிட்டது. 


3) மூணு மணி வரைக்கும் என்ன தண்டனைனு தெரியாம ஒரே குழப்பம்.
ஆனா, அதுவரைக்கும் தொலைக்காட்சியால் சும்மா இருக்க முடியுமா ?
பரபரப்பு இருக்காதே ? கல்லா கட்ட முடியாதே ? என்ன செய்ய ?
அதுக்கும் ஒரு வழி இருக்கு.
இந்த தொலைகாட்சி நிறுவனங்களுக்குனு சில அடிமைகள் இருக்கிறார்கள்.
நிரந்தர அடிமைகள். எந்த தலைப்பு கொடுத்தாலும் அதுக்கு சம்பந்தமேயில்லாம 30 நிமிஷம் மூச்சுவிடாம பேசும் திறமைசாளிகள். அவங்கள வெச்சு பரபரப்பான மொக்கை நிகழ்ச்சிகள் நடத்துவாங்க.
அவங்க யார்னு கேக்குறீங்களா ?
"மூத்த பத்திரிக்கையளார்", "சமூக ஆர்வலர்", “சிந்தனையாளர்”நு தங்களைத்தாங்களே கூறிக்கொள்ளும் மேதாவிகள். என்ன பேசுறோம்னு அவங்களுக்கு புரியாத மாதிரி எல்லா சம்பவங்களுக்கும் கருத்து சொல்லும் கருத்து கந்தசாமிகள் (கா.கா). 


இந்த கா.கா.க்கள் கோயிலுக்கு நேந்துவிட்ட காளை மாதிரி அந்த தொலைக்கட்சி நிறுவனத்தையே சுத்தி சுத்தி வருவாங்க. தினைக்கும் மூஞ்ச காட்டுவாங்க.
இன்னைக்கும் இந்த கா.கா.க்கள் நிறைய கத்துனாங்க.

4) "சன் டிவி”க்கு இன்னைக்கு மூட்டை மூட்டையாக அல்வா கிடைத்த நாள்.
அவர்கள் நீண்ட நாள் எதிர்பாத்த D day.
Free hitல sixer அடிக்குற மாதிரியான சந்தர்ப்பம். சும்மா விடுவார்களா ? வெளுத்து வாங்கினாங்க. எல்லா ஊர்லயும் ஆட்கள தயார் நிலையில நிக்க வெச்சி சுடச்சுட செய்தி போட்டங்க. இத பாக்குற ரரக்களுக்கு, "டேய் அந்த ஊர்ல கொளுத்துறாங்க டா. நாமளும் கொளுத்துவோம். நம்ம வெயிட்ட காட்டுவோம்”னு கொளுத்த ஆரம்பிக்குறாங்க.
வன்முறை ஊர் ஊரா பரவுச்சு.
நிறைய விவாதம் வேற செஞ்சாங்க.Nelson சேவியர் என்னும் செய்தியாளர்,”வன்முறை சம்பவங்களை பார்த்துக்கொண்டிருந்தோம், இடைவேளைக்கு பிறகு மீண்டும் அந்த வன்முறை சம்பவங்களை பார்ப்போம்" என்று கூறினார். சினிமாவுல பரபரப்பான சமயத்துல interval விடுற மாதிரி இவர்களும் interval விட ஆரம்பித்துவிட்டார்கள். 




5) "தந்தி டீவி" பாண்டே, ஒரு இடத்துல உக்காற முடியாத அளவுக்கு பரபரப்பு கொடுத்தார்..


நின்று கொண்டே... நடந்து கொண்டே…. 
அசைந்து கொண்டே…. நேரலையாக….. பேசிக் கொண்.ண்..ண்..ண்..டே இருந்தார். 

ஒவ்வொரு ஊருக்கும் ஃபோன் செஞ்சு அங்குள்ள செய்தியாளர்கிட்ட, “அங்க ஏதாவது வன்முறை நடந்ததா ? அசம்பாவிதம் நடந்ததா ?"னு கேட்டுக்கொண்டே இருக்கிறார். 
இவர் கெட்ட நேரம் (நம் நல்ல நேரம்), இவர் எதிர்பார்த்த 'பெரிய' அசம்பாவிதங்கள் ஏதும் தமிழகத்தில் நடைபெறவில்லை. Touchwood.



6) "புதிய தலைமுறை"யின் எண்ணம் தெள்ளத்தெளிவா வெளிப்பட்டது.
"தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை” என்ற எண்ணத்தை உருவாக்கவே முனைப்பா இருந்தாங்க. “அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்", "கவர்னர் ஆட்சி கொண்டு வர வேண்டும்" என்பதே அவர்கள் எண்ணமாக இருந்தது. 




7) NDTV இன்னும் மோசம்.
அஞ்சு மணி நேரமும் பெங்களூருவுரில் அழுது கொண்டிருக்கும் சில அதிமுக பெண் தொண்டர்களையே திரும்பத்திரும்ப காண்பித்துகொண்டிருந்தார்கள். அதிலும் குறிப்பாக, பெண்கள் மார்பிலும் தலையும் அடித்துகொள்ளும் காட்சிகளை 30 தடவைக்கு மேல் காண்பித்திருப்பார்கள். கூடவே ஆண்கள் உணர்ச்சிவசப்பட்டு கத்தும் காட்சிகளையும் காட்டினார்கள். இவர்களது எண்ணம்,”தமிழர்கள் எல்லாம் காட்டுமிராண்டிகள்” என்கிற கருத்தை நிறுவ வேண்டும். இதற்கு ஒத்து ஓதும் சாம் டேனியல் என்பவர் இந்த செயலை கச்சிதமாய் செய்து கொண்டிருந்தார்.இவருக்கு நிறைய எலும்பு போடுவாங்க போல. தொடர்ந்து தமிழகத்துக்கு எதிராகவே செய்தி வெளியிடுகிறார். கூடவே, இன்று அவருக்கு போட்டியாக இன்னொரு பெண் செய்தியாளர். அவரை சிலர் தாக்க முற்பட்டுள்ளனர் (பத்திரிக்கையாளர்களை தாக்குவது கண்டிக்கப்பட வேண்டும்) அதையும் ஒளிபரப்பினார்கள். 



8) திடீர்னு எனக்கு ஜெயா டிவியில என்ன காட்டுவாங்கனு ஆவல்.
ஜெயா சேனல் திருப்புனா பயங்கர ஷாக் .
இங்கிட்டு இவ்ளோ களேபரம் நடக்குது. அவிங்க என்ன காண்பிச்சாங்க தெரியுமா? “எடப்பாடியில் முதல்வர் அம்மா அவர்கள் துவங்கிய நலத்திட்டகள்”நு அறிவிப்பு செஞ்சுகிட்டிருந்தாங்க. அடேய், எங்களையெல்லாம் பாக்குறதுக்கு ஏர்வாடி பேஷண்ட் மாதிரியா இருக்கு ? 
கடுப்பாகி சேனல் மாத்திட்டேன்.
சாயங்காலம் அவங்களே திருந்தி, வன்முறை காட்சிகள காண்பிக்க ஆரம்பிச்சாங்க. ஆனா, அதை,“அம்மாவுக்கு ஆதரவாக தமிழக மக்களின் கண்டனக்குரல்"னு செய்தி வெளியிட்டாங்க. பாவிங்களா. ஆர்ப்பாட்டம் செய்யுறது, கல்லுவிட்டெறியுறது உங்களுக்கு கண்டனக்குரலா ?
அநியாயமா செய்தி போடாதீங்க டா.



பத்திரிக்கை ஊடகத்துறையில் வேலை செய்யுறவங்களுக்கு :
பொது மக்கள் எல்லாரையும் லூசுனு நினைச்சுட்டீங்களா ?
உங்க கையுல சேனல் இருக்குனு என்ன வேணாலும் செய்தி வெளியிடுவீங்களா ?
ஊர கலவர பூமியாக்கி குளிர் காயாதீங்க.
எலும்புத்துண்டுக்காக மக்களோட உசுரோட வெளயாடாதீங்க.
ரொம்ப ஆடாதீங்க.
பொறுப்பா நடந்துக்கோங்க.

- பாலாஜி.