
"பொது வாழ்வில் ஈடுபடுபவர்களுக்கு திருமணம் ஒரு தடைகல். மனைவி குடும்பம் என வந்துவிட்டால் நினைத்ததை சாதிக்க முடியாது. திருமணம் செய்யாமல், பொதுவாழ்வில் சாதித்த காமராஜரை போல் நானும் வாழ வேண்டும்" - பள்ளிப்பருவம் முதல் மூளை எனக்கு கொடுத்துக் கொண்டிருக்கும் அறிவுரை இது.
ஆனால், சிலரை பார்த்தவுடன் , 'இவரை மணம் செய்து வாழ்ந்தால் நன்றாக இருக்குமே' என எண்ணுவேன். சிலரிடம் பழகியதும் , "வாழ்ந்தால் இவருடன் தான் வாழ வேண்டும்" என விரும்பியிருக்கிறேன் - இது என் பேச்சை கேட்காத ஹார்மோன்கள், எனக்கு கொடுக்கும் கட்டளைகள். கனவுகள்.
இப்படி பல வருடங்களாக என் மூளைக்கும் ஹார்மோன்களுக்கும் இடையே பெரும் போராட்டமே நடந்து கொண்டிருக்கிறது.
இப்பொழுது முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் நான் இருக்கிறேன்.
மூளை சொல்படி கேட்பதா?
ஹார்மோன் இழுத்துச்செல்லும் திசையில் செல்வதா ?
இன்று காலை தினகரன் பத்திரிக்கையில் வெளிவந்துள்ள இந்த பேட்டியை படித்தேன். மீண்டும் மூளை- ஹார்மோன் போர் ஆரம்பமானது. தற்சமயம் மூளை தான் என் ஹார்மோன்களை வென்றிருக்கிறது.
எழுத்தாளர் சுஜாதா (இயற்பெயர்: ரங்கராஜன்).
திரைப்படங்கள் மூலமாக என்னுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவரைப்பற்றி அவருடன் 45 ஆண்டுகள் மனைவியாக 'பணியாற்றிய' திருமதி.சுஜாதா அவர்கள் அளித்துள்ள பேட்டியிலிருந்து சில வரிகள் :-
1) "... எப்பவும் எழுதுறது ,படிக்கிறது,ஸ்டோரி டிஸ்கஷன்னு ஒரு வட்டத்துக்குள்ளேயே இருப்பார்."
2) "...மனைவி குழந்தைங்க பத்தின சிந்தனை அவருக்கு கிடையாது. பசங்க என்ன படிச்சாங்க எப்படி படிச்சாங்கனு கூட அவருக்கு தெரியாது.அவங்களா படிச்சாங்க.அவங்களா வேலை தேடிகிட்டாங்க.அவங்களுக்கு பிடிச்ச பெண்ணை கல்யாணம் செஞ்சுகிட்டாங்க. அப்பாவா அவர் எந்த ஸ்டெப்பும் எடுத்ததில்லை..."
3) ".. நான் சாப்பிடனா தூங்கினனா எனக்கு என்ன வேணும் ...எதையும் அவர் கேட்டதில்லை.செஞ்சதில்லை…"
4) "….குடும்பத்தை தாண்டி பெண்கள் வெளில வரக்கூடாதுனு நினைப்பார். இதுக்கு காரணம் அவர் வளர்ந்த விதம். ஸ்ரீரங்கத்து பாட்டி வீட்ல தான் வளர்ந்தார்...வளர்ந்த பிறகு கூட மனதளவுல அந்த அஹ்ரகார பையனாதான் இருந்தார்….."
5)"...கலை உலகை சேர்ந்தவங்க வேற உலகத்துல வாழ்வாங்கனு சொல்வாங்க. அதை என் கணவர் விஷயத்துல கண்கூடா பார்த்தேன். அவரோட மனநிலை எப்ப எப்படி மாறும்னு யாருக்கும் தெரியாது.....அவர் எழுதினத நான் படிச்சா அவருக்கு பிடிக்காது.."
6) "…...பல நாட்கள் அம்மா மடில படுத்து அழுதிருக்கேன் . திரும்பி வந்திடுறேன்னு கதறியிருக்கேன்….ஆனா குழந்தைகளோட ஒரு பொண்ணு தனியா வாழ முடியாது, அட்ஜஸ்ட் பண்ணிக்கோனு சொல்லுவாங்க...அந்த காலகட்டம் அப்படி….அதுவே இன்றைய சூழ்நிலையா இருந்திருந்தா நிச்சயம் அம்மாகிட்ட யோசனை கேட்டிருக்க மாட்டேன். குழந்தைகளோட தனியா வந்திருப்பேன் …."
7) "…...அவருக்கு மனைவி, குழந்தைகள் மேல அன்பு இல்லைனு சொல்லமுடியாது.ஆனா அதை வெளிப்படுத்த தெரியாது.வெளிப்படுத்தாத அன்பால் யாருக்கு என்ன பயன் ? "
# "…...இது வரை கணவர், மாமனார் , மாமியார்,அம்மா, அப்பா பிள்ளைகனு மத்தவங்களுக்காவே வாழ்ந்துட்டேன். இப்ப தான் எனக்காக வாழ ஆரம்பிச்சிருக்கேன்..."
பெரும்பாலான குடும்பங்களில் நடப்பதை தான் இந்த பேட்டி வெளிக்கொணர்ந்துள்ளது. கணவர் மேல் உள்ள அன்பின் காரணமாகவும், சமுதாயத்திற்கு அஞ்சியும், மனைவிமார்கள் அதனை வெளிப்படையாக சொல்வதில்லை. ஆனால்,65 வயதான ஒரு பெண், அதுவும் தமிழகம் பெரிதும் மதிக்கும் எழுத்தாளரின் மனைவி, கணவர் இறந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு, இப்படி ஒரு பேட்டி கொடுத்திருப்பது தான் அதிர்ச்சியாக உள்ளது.
தீவிரவாதிகளால் கடத்திச்செல்லப்படும் ஒருவரின் மனைவிக்கு ஏற்படும் வலியை , கனவுத்தொழிற்சாலையில் கோடிகள் கொட்டி உருவாக்கப்பட்ட ரோஜா திரைப்படத்தின் வசனங்கள் மூலம் உணர்த்தினார் எழுத்தாளர் சுஜாதா. ஆனால், நிஜ உலகில் கணவரால் மனைவிக்கு ஏற்படும் வலிகளை, திருமதி.சுஜாதா அவர்கள், ஒரே ஒரு சிறிய பேட்டி மூலம் மக்களுக்கு உணர்த்திவிட்டார் .
மேலே சொல்லப்பட்ட எழுத்தாளரின் பல குணங்கள் என்னிடமும் இருக்கிறது.குடும்பத்தை பற்றி சிந்திக்க நேரமில்லை. தற்பொழுதைய உடல் நிலை மற்றும் உணவு பழக்கங்களை கருத்தில் கொண்டால், என் வாழ்நாள் 55 வயது வரை மட்டுமே என யூகிக்கிறேன். அதாவது இன்னும் 25 வருடங்களுக்கு பிறகு, நான் மறைந்ததும், திருமதி.பாலாஜி இதே போன்றதொரு பேட்டி கொடுக்கலாம். அந்த அவமானம் வேண்டாமே. அதனால், இந்த பதிவின் முதல் வரியில் நான் எழுதியது போல், என் மூளை சொல்படி வாழ்வதே சரி என்று நினைக்கிறேன்.
பாலாஜி.