இன்று சந்தோஷமான மற்றுமொரு நாள். 
கிட்டத்தட்ட 12 மணி நேர வேலை. 

காலை, மாணவர்களை அழைச்சுகிட்டு கிராமத்திற்கு சென்றிருந்தேன். இன்னைக்கு தான் இந்த batch மாணவர்களுக்கு கிராமப்புறத்தில் முதல் நாள் posting. கிராமத்து பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு மாணவர்களை அறிமுகப்படுத்தினேன். கிராமத்தினருக்கு நாங்கள் போனது ரொம்ப சந்தோஷம். வரவேற்றார்கள். கிராமத்தை பற்றியும், பஞ்சாயத்து அமைப்பு பற்றியும், அவர்கள சுகாதாரப் பிரச்சனைகள் பற்றியும் விளக்கினார்கள்.

மாணவர்களையும், சுகாதார பணியாளர்களையும் அழைத்துக்கொண்டு மொத்த கிராமத்தையும் சுற்றிப்பார்த்தோம். எனக்கு சொல்ல முடியாத சந்தோஷம். எப்படி எழுதுறதுனு தெரியல. பம்பு செட், நெல் வயல், கோழிக்குஞ்சுகள்…
3மணி நேரம் சுற்றினோம். கொளுத்துர வெயில். எல்லாருக்கும் வியர்த்து வழிந்தது. ஆனா யாரும் சோர்வடையவில்லை. குடிநீர் தொட்டி, கோயில்,கிராமத்து பள்ளி, ரேஷன் கடைனு ஒவ்வொன்னா மாணவர்களை சுற்றிக்காட்டி, அவைகளுக்கும் சுகாதாரத்திற்கும் என்ன சம்பந்தம்னு விளக்கினேன். மாணாவர்கள் இது எல்லாத்தையும் பாத்து map வரையணும்.

தெருத்தெருவா போனோம். அத்துன பேரும் White coat போட்டிருந்ததால, நாய்கள் எல்லாம் பயந்து போய் எங்கள பாத்து விடாம கத்த ஆரம்பிச்சுது. இந்த பசங்களாவது சும்மா இருக்கலாம். இவங்களும் பதிலுக்கு கத்த, எல்லா நாயும் ஓடிப்போயிடுச்சு. எங்கள ஏதோ நாய் புடிக்க வந்தவங்க மாதிரி மொத்த ஊரும் எங்கள வித்யாசமா பாத்துச்சு.

பசங்களுக்கு அளவிட முடியாத நீளத்துக்கு வால். மாணவிகளுக்கு அளவிட முடியாத அகலத்துக்கு வாய். பம்பு செட்டுக்கு ஒருத்தன் குளிக்க போனான், ஈமு கோழிய வம்பிளுத்தான் இன்னொருத்தன், பாட்டி கிட்ட கிண்டலா பேசினான் இன்னொருத்தன். அவங்க பண்ண சேட்டைகள ரசிச்சுகிட்டே வந்தேன்.
கொஞ்சம் ஏமாந்தா மாதுளை பழத்த பறிக்கப்போயிடுறாங்க. சீத்தாப்பழத்த பறிச்சுடுவாங்க போல. வீட்டு வாசல்கள்ல இருந்த பூக்கள பறிக்க நினைச்சாங்க மாணவிகள். நான் தான் எல்லாரையும் மிரட்டி சமாளிச்சு இழுத்துட்டு வந்தேன்.

அப்படியும் 2 பேர் 'பாத்ரூம் போறேன்'னு போய், வயல்ல ஒதுங்கினாங்க. திரும்ப வரப்போ, 2 கரும்புத்துண்ட லவட்டிகிட்டு வந்து சாவகாசமா தின்னாங்க. எனக்கு தான் பயம். கிராமத்துக்காரங்க யாராவது பாத்து, எங்கள கட்டி வெச்சுட்டா ?

எப்படியோ எந்த பிரச்சனையும் இல்லாம பேருந்துக்கு திரும்ப வந்துட்டோம். மாணவர்கள விட நான் தான் நிறைய கத்துக்கிட்டேன். கிராமங்கள புரிஞ்சிக்க பல வருஷம் ஆகும் எனக்கு. இந்த பசங்களோட போகுறதால, என் வயசு குறஞ்சுகிட்டே வருது. எல்லாருக்கும் கூல் ட்ரிங்ஸ், பிஸ்கட் வாங்கிக்கொடுத்தேன். எனக்கு தான் ஒரு ரொட்டிய கூட தராம மொத்தத்தையும் காலி சென்சுட்டாங்க. 

நகரத்து வேர் நான். கிளைகளையாவது கிராமத்துல பரப்பலாம்னு நினைக்குறேன்.