ரெண்டு நிமிஷ இடைவெளியில வீல் வீல்னு வித விதமான ராகத்துல குழந்தைங்க அழர சத்தம் கேட்டா ...என்ன அர்த்தம் ?
அந்த எடத்துல குழந்தைங்களுக்கு ஊசி குத்துறாங்கனு அர்த்தம்.

தடுப்பூசி போட வரிசையில் நிப்பாங்க.
எல்லா ஸ்பீகர்களும் அம்மா தோள்ல சொகமா தூங்கிகிட்டு இருக்கும்.
சிலதுங்க முட்ட கண்ண உருட்டி உருட்டி பாக்குங்க.
பலதுங்க வாய பொளந்து ஜொள்ளு ஊத்திகிட்டு இருக்குங்க.
ஆனா ஒன்னு கூட நம்மள மதிக்காது.

இப்படியே அமைதியா சத்தமில்லாம ஊசி போட்டுகிட்டு போனா என்னவாம் ?
மொத ஊசி போட்டதும் குட்டி சாத்தான் கத்தும் பாருங்க ...யப்பா...
அ அ அனு ஆரம்பிச்சு ஆஆ ஆ நாலு தெருவுக்கு கேக்குற மாதிரி காது கிழிய கத்தும்.
இந்த ஒரே சாகசத்தோட கச்சேரி முடியாது..


ஒன்னு அழரத பாத்து, வரிசையில இருக்குற எல்லா ரேடியோவும் கத்த ஆரம்பிக்கும்...
இதுங்க வாயில சைலென்சர தான் வெச்சு விடணும்.
அதுல ஒரு அம்மா, முறைச்சிட்டு முணுமுணுத்துகிட்டே போவாங்க .
ஒரு வேள சாபம் விடுவாங்களோ? 
குழந்தைய அழ வெக்கனும்னு எங்களுக்கு மட்டும் நேர்த்தி கடனா என்ன ?

"வலியில்லாம ஊசி போடுறது எப்படி?"னு பேராசிரியர்கிட்ட ஆராய்ச்சி கட்டுரைகள காட்டி பேசினேன். "இப்போதைக்கு எதுவும் சரி வராது"னு சொல்லிட்டார்.

கைக் குழந்தைகளையாவது கை கால அமுக்கி பிடிச்சு, ஊசி போட்டு விட்டுடலாம்....
வளந்த குழந்தைங்க பண்ற அழுச்சாட்டியம் இருக்கே ?

மருத்துவமனை ஊழியர்கள் எல்லாரையும் வர வழைச்சேன்.
'ஏதோ கிஃப்ட் தர போறேன்'னு நினைச்சு சந்தோஷமா வந்தாங்க.
"ரத்த சம்பந்தமான பொருட்கள கையாளுறீங்க. இலவசமா ஹெபடிடீஸ் தடுப்பூசி போட மேல் அதிகாரிகிட்ட அனுமதி வாங்கிட்டேன். போட்டுக்கோங்க"னு சொன்னது தான் தாமதம்.
"வயித்து வலி சார்"னு முதல் துப்புரவு பணியாளர் சாக்கு.
"ஜூரம்"னு அடுத்தவர் ஓடிவிட்டார்.
ஒரு 45 வயசு துப்புரவு பணியாளர்,"வேண்டாம் சார்"னு கால்லயே விழுந்துட்டார்.

அடுத்தவங்க தான் இப்படீனா, கூட பொறந்த தங்கச்சி?
"டி.டி ஊசி போட்டுக்கணும் டி"னு சொன்னதுக்கு,
"ஏன் ஊசி ? அவசியம்னா அத மாத்திரையாவே கொடுத்துடு டா. சாப்பிட்டுக்குறேன்"னு சொல்றா.

சோத்தை கிராமம் போனப்ப, ஒரு வீட்டுல நிறைய எரும மாடுங்க..
"இதுங்க கூட ஒரு போஃட்டோ ஷூட் எடுத்துகிட்டா என்ன ?"னு ஆசபட்டு, கிட்ட போனேன்.
5 பிளாக்கீஸ் மிரண்டு ஓடிடுச்சு.
" உங்கள ,ஊசி போட வந்த மாட்டு டாக்டர்னு நினச்சு, மிரண்டு ஓடுதுங்க"னு சொன்னாங்க.

அட அறிவு கெட்ட எருமைகளா,"மாட்டு டாக்டருக்கும் மனுச டாக்டருக்கும் வித்யாசம் தெரியாலையா? நான் ஊசி போட வரலை"னு சமாதானம் பேசி, இந்த போட்டோ எடுத்துக்கிட்டேன்.

மனுசஷங்களுக்கு மட்டுமில்ல, மிருகத்துக்கும் ஊசினா டர்ரோ டர். 
ம் ம் ம்...வலியில்லாம ஊசி இருந்தா எவ்ளோ சொகமா இருக்கும்?..ப்ச்