
அம்மாகிட்ட நல்லபேர் எடுக்க உச்சிபிள்ளையார் கோயிலுக்கு கிளம்பினேன்.
கூட்டமான கடைவீதி…நான் தான் இயற்கை ரசிகனாயிற்றே - பட்டுப்புடவை, சுடிதார், மல்லிப்பூ, ரோஜா, வெக்கம், ஓரப்பார்வை,நெற்றிக் குங்குமம், சந்தனக்கீற்று, வளையல் கடை ஒத்திகைகள்…ஆஹா ஆஹா...இது தானே தமிழக ஸ்பெஷல்…இந்த அழகை ரசிக்கத்தானே விடாப்பிடியா தமிழ்நாட்டுக்கு வந்தேன்...…வீதியிலேயே நல்ல தரிசனம் கிடைத்துவிட்டது...
செல்ஃபோன் கேமராவுக்கு பணம் கட்டிவிட்டு மலை உச்சிக்கு படியேறினேன்.…ஆனா கருங்கல் சிற்பங்களை மட்டுமே படம் எடுக்க அனுமதியாம்.. நடக்கும் அழகு சிற்பங்களை படம் எடுக்க முடியாது….என்ன செய்ய...கண்ணாலேயே படம் எடுத்து சந்தோஷப்படுக்கிட்டேன்…
மலை உச்சி…அரச மரம்…ஞானம் கிடைக்கட்டுமேனு மரத்தடியில் உட்கார்ந்தேன்…மரத்துக்கு பின்புறம் ஏதோ சத்தம்- ஒரு ஜோடி ஞானம் வாங்கிக்கிட்டு இருந்தாங்க…பாறை மேல உக்காந்து மலைக்கோட்டை நகரத்த ரசிச்சேன்…கூட்டம் கூட்டமா வந்திருந்த இளைஞர்கள் ரசித்ததோ வேற…
எத்தனை ஜோடிகள்…ஆனா அத்துனை ஜோடிகளுக்கும் பொதுவானதா ஒரே ஒரு விஷயம் தான் -
* கல்யாணமாகாத ஜோடிகளில், அவன் பொய் சொல்லிக்கிடிருப்பான், அவள் ரசித்துக்கொண்டிருப்பாள்...
* கல்யாணமான ஜோடிகளில், அவள் சத்தம் போட்டு பேசிக்கொண்டிருப்பாள். இவன் அமைதியா "ம்" கொட்டிக்கிட்டிருப்பான்…..
# சிதம்பரத்தை ஆட்சி செய்வது மதுரை தானே.
தூரத்துல ஒரு பச்சை தாவணி...கையில ப்ரவுன் சட்டை...தலையில மல்லி... 4 வருஷமா நான் பார்த்திராத தாவணி….ஓவியத்த கண் வழியா மூளையில வரைஞ்சிக்கிட்டேன்..
இயற்கைய ரசிச்சதுல, வந்த வேலைய மறந்துட்டேன்….வினாயகரை உள்ளே வெச்சு கதவ மூட ஆரம்பிச்சாங்க…வேகமா ஓடிப்போய், கம்பிக்குள்ள நுழஞ்சு கடைசி நபரா சாமிக்கு முன்னாடி போய் மூச்சு வாங்க நின்னேன். ஆனா அவர்கிட்ட என்ன வேண்டுறது ? அவரே என்னைய மாதிரி தனியாத்தான இருக்காரு….
"எல்லாத்துக்கும் நன்றி. எல்லாரும் நல்லா இருக்கணும்"னு வேண்டிக்கிட்டு திரும்பிட்டேன்...