திமுகவின் திருச்சி மாநாடு 
***********************


நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து, கேரள இசைக்கலைஞர்களின் வாத்திய இசை முழங்க திராவிட முன்னேற்றக் கழகத்தின் 10வது மாநில மாநாடு துவங்கியது.

குலம், கோத்திரத்தை ஒழிக்க போராடிய தந்தை பெரியாரின் வழித்தோன்றலான திரு.கி.வீரமணி அவர்கள்,"எங்கள் குலத்தலைவர் கலைஞர் அவர்களே!" என பகுத்தறிவு துதி பாடினார். 

2 ஜி வழக்கில், 'திமுகவினர் எங்கே தன் பெயரையும் போட்டுக் கொடுத்துவிடுவார்களோ' என ஏற்கனவே பயந்துபோயுள்ள இந்த நேரத்தில், "பிரதமரை கைகாட்டும் பொறுப்பு கருணாநிதிக்கு உள்ளது" என திரு.தொல்.திருமாவளவன் பேசியுள்ளது நிச்சயம் பிரதமரை கிலியூட்டத்தான் செய்யும்.

மாநாட்டுத்திடலில், திமுகவின் ஒரே பெண் பேச்சாளரும், திமுகவின் கொ.ப.செ.வாக கருத்தப்படுபவருமான நடிகை.குஷ்பு, "ஆணாதிக்கத்திலிருந்து விடுதலை வாங்கி கொடுத்த பெரியார், இந்த திருச்சி மண்ணில்தான் பிறந்தார்" எனப்பேசி இன்று ஒரு புதிய வரலாறு படைத்தார்.

"ஹார்லிக்ஸ்" புகழ் அஞ்சாநெஞ்சனின் வரவு இல்லாதது பெரிய குறை தான். ஆனால் அவர் கற்றுக்கொடுத்த டெக்னிக்படி டாஸ்மாக் பாட்டில்கள் திருடப்பட்டு கட்சிக்கு பெருமை சேர்த்துவிட்டனர் நம் உடன்பிறப்புகள்.

மாநாட்டினால் உற்சாகம் அடைந்தவர்களைக்காட்டிலும், உற்சாக பானத்தினால் குஷியடைந்தவர்கள் தான் மாநாட்டுத்திடலில் அதிகமாக இருந்தார்களாம்.

திராவிட மாநாடுகளில், தொண்டர்களின் சோர்வைப்போக்க ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால் இன்றை காலத்தில், கட்சியினருக்கு Action காட்சிகளும் தேவைப்படுகிறது போலும். நிறைய அடிதடிகள் நடந்தேறியுள்ளது. ஒரு முன்னாள் அமைச்சரே, கேப்டன் பாணியில் வேட்டியை மடித்துக்கட்டி, களத்தில் இறங்கி ஒரு தொண்டனுக்கு அறைவிட்டது தான் இந்த மாநாட்டின் Highlight.

இன்று நடந்தது திமுகவின் மாநில மாநாடா அல்லது திரு.மு.க.ஸ்டாலினின் முடிசூட்டு விழாவா என்று பட்டிமன்றம் எல்லாம் நடத்தத் தேவையில்லை. தலைவர் அதை தெளிவாகவே உணர்த்திவிட்டார். அடுத்த தலைவரான திரு.ஸ்டாலினும், வழக்கம் போல் இல்லாமல், "தமிழகத்தில் நடப்பது அடங்கா பிடாரி ஆட்சி" என சற்று காரமாகவே பேசியுள்ளார்.

யாரும் எதிர்பாராத வகையில், திரு.தயாநிதி மாறனும் ஆவேசமாக, "ஜெயலலிதாவே உன் கனவு பலிக்குமா? நீ பிரதமராக வேண்டும் என்ற கனவு பலிக்குமா? இந்தக் கூட்டத்தை பார்த்த பிறகாவது திருத்திக்கொள். உனது கனவு பலிக்காது" என்று முதல்வரை ஒருமையில் பேசி, தானும் திமுகவை சேர்ந்தவர் தான் என்பதை நிரூபித்துவிட்டார்.

"சேது சமுத்திரத்திட்டம்", "கச்சத்தீவு", "ஈழத் தமிழர் பிரச்சினை", "நதிநீர் தேசியமயம்" போன்ற புளித்துப்போன பழைய கள்ளையே தீர்மானமாக நிறைவேற்றியுள்ளனர். அதுவும், இந்த 'சேது திட்டம்' 'சேது திட்டம்'னு பேசிப்பேசியே கட்சியினரை "சேது"வாக்கிவிடுவார் நம்ம தலைவர்.

மாநாட்டில் தி.மு.க.விற்கு வசூலான மொத்த தேர்தல் நிதி 106 கோடி ரூபாயாம் ! 

இவ்வுளவு கருப்புப்பணத்தை வெள்ளையாக மாற்ற உதவியதைத் தவிற, உருப்பிடியான வேறு எந்த ஒரு பலனும் இந்த திருப்புமுனை மாநாட்டினால் கட்சிக்கு ஏற்படப்போவதில்லை.

- பாலாஜி.