
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சர்வதேச முதலீட்டாளார்கள் மாநாடு சென்னையில் இன்று வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
"98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. உற்பத்தித்துறைக்கு ஒரு லட்சம் கோடி. மின்சக்திக்கு ஒரு லட்சம் கோடி. இன்னபிற துறைகளையும் சேர்த்து மொத்தம் 2.42 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் வரவிருக்கின்றன” என்று ஜெயா டிவியில், மாண்புமிகு... தமிழக முதல்வர்... இதய தெய்வம்…. புரட்சித்தலைவி…. டாக்டர்… அம்மா அவர்கள் பெருமிதமாய் பேசிக்கொண்டிருக்கிறார். இதையே மீண்டும் மீண்டும் ஒளிபரப்பிக்கொண்டிருக்கிறார
அதிகபட்சமாக நமக்கு இதுவரை தெரிஞ்சதே 2Gயின் 1.76 லட்சம் கோடி தான். அதவிட அதிகம் இந்த 2.4 லட்சம் கோடி.
"எதிர்பார்த்த இலக்கை விட ரெண்டு மடங்கு முதலீடு !
தன் இனிஷியலைப் போலவே முதல்வருக்கு இதிலும் மாபெரும் வெற்றி!” என "அம்மா" பெருமை பேசத்தோணும்.
"அடேய், லட்சம் கோடினு பேசுறீங்களே, இதெல்லாம் நடந்தா 10 வருஷத்துல நம்மூரும் சிங்கப்பூரா மாறிடுமே ! துபாய் மாதிரி பள பள தெருவுல சோத்த போட்டு சாப்பிடலாமே ! பேசாம 10,15 வருஷம் லேட்டா பொறந்திருக்கலாமோ"னு யோசிக்கத்தோணும்.
கொஞ்சம் வெய்ட்டீஸ்.
இந்த படத்தோட first half மட்டும் தான கேட்டிருக்கோம். கொஞ்சம் interval எடுத்துகிட்டு வாங்க. second Half ஐயும் பார்க்கலாம் !
மாநாட்டின் இன்னொரு முகம் :
**************************
1) “இது ஜெயா புகழ் பாடும் மாநாடு. ரெக்கார்ட் டான்ஸ் தான் நடைபெற்று வருகின்றது"னு ஈ.வீ.கே.எஸ் இளங்கோவன் தனக்கே உரிய கண்ணியமான முறையில் விமர்சித்துவிட்டார்.
எம்ஜிஆர் பாடலுக்கு அதிமுக பெண்கள் நடனமாடியதை திமுகவினர் “குத்தாட்டம்” என்று விமர்சித்து வருகிறார்கள். குத்தாட்டம் ஆடி அரியணை ஏறியவர்கள் பற்றிய வரலாறு திமுகவினருக்கு தெரியாதது அச்சர்யம் தான். சரி போகட்டும்.
இப்படியெல்லாம் கலை நிகழ்ச்சி நடத்தினாத்தானே வெளிநாட்டு investors குஷியாவாங்க. உடனே கோடிக்கோடியா கொட்டிக்கொடுப்பாங்க. தவிர, 3Dயில ரெக்கையோட குதிரை பறந்து வந்து அம்மா கால்ல விழந்ததுதானே ஹைலைட். அம்மாவும் அத வெகுவா ரசிச்சாங்களே. இதெல்லாம் இல்லாம, விழாவுக்கு ஒதுக்குன மக்கள் வரிப்பணம் 100 கோடி ரூபாய வேற எப்படி செலவழிக்கிறதாம்? சொல்லுங்க பார்ப்போம்?
2) மாநாட்டு ஏற்பாடுகளால் மூன்று நாட்களாக சென்னை நகரம் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவிட்டதாம். சென்னைவாசிகள் ட்விட்டரில் புலம்புகிறார்கள். இதெல்லாம் உங்களுக்கு புதுசா என்ன ? போக்குவரத்து நெரிசலா இருந்தா ஸ்கூலுக்கு லீவ போட்டு தூங்குங்க. இல்ல சூப்பர் சிங்கர் பாருங்க. silly fellows
3) "எந்த பதவியிலும் இல்லாத சசிகலா எப்படி இந்த சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளலாம்"னு ஃபேஸ்புக்கில் ஒருவர் கோபமாய் கேள்வி எழுப்பியுள்ளார்?
என்னது, சசிக்கும் அரசுக்கும் சம்பந்தமில்லையா?
Tamil Nadu என்ற பெயரை TASMAC NADU என்று மாற்றி அமைப்பதில் உயிர்த்தோழியோட பங்கு பற்றி தெரியாதவரா இருப்பார் போலும். இதுவே பழைய மேடமா இருந்திருந்தா இந்நேரம் அவருக்கு flipkart மூலம் கஞ்சா வழக்கு பார்சல் கிடைத்திருக்கும். be careful தம்பி.
4) ஊர் முழுக்க அம்மா பேனர் கட்டியிருக்காங்க. "தங்கத்தாரகையை பாராட்டி மெட்ரோ தூண் முழுக்க பதாகைகள் கட்டியுள்ளார்கள்"னு ஒருவர் ஆதங்கப்படுகிறார். ஹலோ சார், மெட்ரோவையே "அம்மா மெட்ரோ"னு பேர் மாத்தலாம்னு யோசிச்சுகிட்டிருக்கோம். நீங்க என்னன்னா..
5) எல்லாரும் இவ்வுளவு யோசிக்குறாங்களேனு நானும் கொஞ்சம் யோசிச்சேன். "தமிழகத்தில் நடக்கும் சர்வதேச மாநாட்டில் கேரளாவின் செண்டை மேளம் எதற்கு?" யோசிச்சேன். கேரள நடிகைகள் கோலிவுட்டில் ஊடுறுவியதைப்போலவே,கேரள ஐஏஎஸ் அதிகாரிகள் தமிழக அதிகார மையங்களில் ஊடுறுவியதைப்போலவே, கேரள கலச்சாரமும் இங்கே ஊடுறுவியிருக்கிறது. இதில் என்ன ஆச்சர்யம்?னு எனக்கு நானே விடைதேடிக்கிட்டேன்.
காமெடியெல்லாம் போதும்.
இந்த மாநாட்டைப்பற்றி சீரியஸா சில விஷயங்கள் பேசணும்.
1) நாலு வருஷம் நல்லா ஆட்சிக்கட்டிலில் படுத்து குறட்ட விட்டு தூங்கிட்டு, தேர்தல் வரப்போகும் கடைசி நேரத்துல மாநாடு நடத்த வேண்டிய அவசியம் என்ன?
தேர்தல் நாடகமா இது?
ஏன் "தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிக்க வேண்டும்” ?
"சாகும் தருவாயில் சங்கரா சங்கரா சங்கரா” எதற்கு?
இதை யாரிடம் கேட்பது?
நாஞ்சில் சம்பத் இதற்கு ஏற்கனவே பதில் சொல்லிவிட்டார்: “புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களுக்கு எப்பொழுது எதை செய்ய வேண்டும் என்பது நன்றாகத் தெரியும். அம்மாவுக்காகத்தான் இவ்வுளவு நாள் காத்திருந்தோம். மக்களும் காத்திருக்கட்டுமே? இதிலென்ன தவறு? ”
எந்த தப்பும் இல்லை சார்.
நாங்க தான் தப்பு பண்ணிட்டோம்.
2) இன்று 98 Memorandum of Understanding (MoUs)
கையெழுத்தாகியுள்ளத, இதெல்லாமே implement ஆகுமா? சந்தேகம் தான்.
எப்பொழுது செயல் வடிவத்திற்கு வரும் ? தெரியாது.
இதற்கெல்லாம் ஏதாவது timeline உள்ளதா ? தெரியாது.
2012ல், தமிழக அரசு -தனியார் நிறுவங்களுக்கிடையே 21 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், அதில் 524 கோடி ரூ மட்டுமே செயலாக்கத்துக்கு வந்துள்ளது (overall implementation rate) . இது வெறும் 2.4 %.
http://dipp.nic.in/
இப்படியாக, 2011முதல் 2015 ஜூலை வரை அதிமுக அரசால் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் செயலாக்கத்துக்கு வந்துள்ள முதலீடு வெறும் 5.64 %. புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கும், உண்மையிலேயே செயலாக்கத்துக்கு வரும் முதலீடுகளின் அளவுக்கும் மிகப்பெரிய இடைவெளி இருப்பது கவலை கொள்ள வேண்டிய ஒன்று. இதே நிலை தொடருமானால், 2 லட்சம் கோடியில் செயலாக்கத்துக்கு வரவிருப்பது, வெறும் பத்தாயிரம் கோடி ரூ தான்.
3) திமுக தலைவர் கலைஞரின் இன்றைய அறிக்கையிலிருந்து, இன்னொரு முக்கியமான கேள்வி எழுகிறது: -
“தமிழ்நாடு பெட்ரோ-ப்ராடக்ட்ஸ்”, “திருச்சி டிஸ்டிலரீஸ்”, “தூத்துக்குடி அல்கலின் கெமிகல்ஸ்” ஆகியவை மூடப்பட்டு விட்டன.
“இசுஸு” ஆந்திராவுக்குச் சென்றுவிட்டது.
“செயின்ட் கோபைன்"னின் 1000 கோடி ரூ விரிவாக்க ஆலை ராஜஸ்தானுக்குச் சென்று விட்டது.
ராம்கோ சிமெண்ட் தனது தொழிற்சாலையை ஆந்திராவில் அமைக்க இருக்கிறது.
- இங்கிருக்கும் தொழிற்சாலைகளையே தக்க வைக்க முடியவில்லை. அதை சரி செய்யாமல் புத்துப்புது ஒப்பந்தங்கள் போடுவதால் என்ன பயன்?
"கூரை ஏறிக் கோழி புடிக்காதவன் வானம் ஏறி வைகுந்தம் போனானாம்”
வரப்போகும் நிறுவனமும் இதே போல் ஓடிவிட்டால்?
4) தொழில் தொடங்க 30 நாளில் அனுமதி வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் சொல்லியிருக்கிறார். இந்த வாக்குறுதி மட்டும் போதுமா? தனியார் நிறுவனம் தமிழகத்தில் தொழில் துவங்க மத்திய அரசின் பல துறைகளிலிருந்தும் அனுமதி தேவை. மாநாட்டில், தமிழக முதல்வர் மோடியை வெகுவாக பாராட்டியதற்கும், மத்திய அமைச்சர் பொன் ராதாகிஷ்ணனின் ஒத்துழைப்பை நாடியதற்கும் இதுவே காரணம். ஆக, அதிமுக- பாஜக என்னும் இரண்டு காளைகளும் ஒருசேர ஒத்துழைத்தால் தான் இந்த டயர் வண்டியை முன்னே நகர்த்த முடியும். நாளையே தேர்தல் பங்கீட்டில் பிரச்சனை ஏற்பட்டாலோ, பழையபடி வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிவிட்டாலோ, மத்தியில் உள்ள பாஜக அரசு, தமிழக அரசால் கொண்டுவரப்படும் நிறுவனங்களுக்கு முட்டுக்கட்டை போடாமலா இருக்கும்?
எது எப்படியோ. மோடி எப்படி “Make in India” என்று வித்தைகாட்டி மார்க்கெட்டிங் செய்தாரோ, அதே போல் நம் முதல்வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி மார்க்கெட்டிங் செய்ய முயற்சி செய்துள்ளார். அதில் பெருமளவு வெற்றியும் பெற்றுள்ளார். இந்த திட்டங்கள் எந்தளவிற்கு நடைமுறைப்படுத்தப்பட்டு தமிழகத்தில் தொழில்வளம் பெருகும் என்பதை தேர்தல் முடிவுகள் தான் தீர்மானிக்கும்.
- உண்மையுடன்,
பாலாஜி