பல்பு வாங்குறது ஒன்னும் புதுசில்ல,பழகிடுச்சு...
ஆனா இன்னைக்கு கூட்டமா போய் பல்பு வாங்குனது ஒரு தினுசா இருந்துச்சு.


எய்ம்ஸ் MD மருத்துவர்களுக்கு, தலைமைப்பண்பு மற்றும் Teaching skills தொடர்பா 10 நாள் training. MBBS மாணவர்களுக்கு எப்படி பாடம் எடுக்க வேணும்? Lesson Plan உருவாக்குவது எப்படி ? மருத்துவ தேர்வுக்கு கேள்வித்தாள் உருவாக்குவது எப்படி போன்ற பல பயிற்சிகள கொடுக்குறாங்க. பெரும்பாலும் செய்முறை வகுப்புகள் தான்.

இன்னைக்கு 5வது நாள். நாங்க 9 மருத்துவர்கள்.
செய்முறை பயிற்சி. பயிற்சியாளார் ,"உங்களுக்கு 2 நிமிஷம் தான் அவகாசம்.அதற்குள் 10 கேள்விக்கும் விடையளிக்கணும்"னு சொல்லிகிட்டே அவசர அவசரமா எல்லாருக்கும் ஒரு தாளை கொடுத்தார்.(photoவுல உள்ளது).
stop clockஐயும் துவக்கிவிட்டார்.
"2நிமிஷம்"."ரெண்டே நிமிஷம்" என்பதை மட்டும் திரும்ப திரும்ப சொன்னார்.
எங்க எல்லாருக்கும் டென்ஷன்.பரபரப்பா துவங்குனோம்.


முதல் கேள்வி: "உங்கள் பெயரை பின்னிருந்து முன்னாக ரிவர்சில் எழுத வேணும்".
எங்க அப்பாவும்,அவர் மாமனாரும் டிஷ்யூம் போட்டுக்காம இருக்குறதுக்காக, எனக்கு 2 பேர சேத்து பெரிய பெயரா வெச்சுட்டாங்க. தலயெழுத்த தலகீழா எழுதுனேன்.


அடுத்த கேள்வி : 259,314,279,128 - இந்த 4 எண்களையும் கூட்டணும். பேப்பர்ல எழுதி, விரலவிட்டு எண்ணி கூட்டுனேன். அடுத்தது தான் வில்லங்கம். அந்த கூட்டு தொகையிலயிருந்து 0.0054 என்ற எண்ணை கழிக்கணும். ம்க்கும். +2 முடிஞ்ச சமயம்,"தம்பி, கணக்கு பிடிக்கலைனா Mbbs எடுத்துடுங்க"னு அறிவரை சொன்னவர் உருவம் இப்போ கண்ணுக்கு முன். அவர நேர்ல வெச்சிகிறேன்.


அடுத்து ?
"கைய மேல தூக்கி "ஜெய் மாதாஜி"னு கத்தணும்". அமாவாசை பிட்டுக்கு வர காக்காய்ங்க மாதிரி ஒவ்வொருத்தரா கத்துனோம்.


இதுக்குள்ள பாதி நேரம் ஓடிடுச்சு.
"பக்கத்துல இருக்குறவர் பேர எழுதணும்".
இடதுல இருக்குறவர் பெயரையோ வலதுல இருக்குறவர் பெயரையோ எழுதணும்.யார எழுதுறதுனு நான் யோசிக்கவேயில்லை. வலப்பக்கமிருந்த பொண்ணு பேர எழுதுனேன்.
இப்ப தான் ஒருத்தர் ஜெய் மாதாஜினு கத்துனார். அட நம்மல விட மந்தம் போலனு சந்தோஷபட்டுகிட்டே அடுத்த கேள்விக்கு போனேன்.


"சொல்லிக்கொடுக்குற பயிற்சியாளர் பெயர எழுதணும்"-இதெல்லாம் ஒரு கேள்வினு கேக்குறாங்க பாருனு கடிகாரத்த பாத்துக்கிட்டே எழுதிட்டு அடுத்த கேள்விக்கு தாவுனேன்.


"எய்ம்ஸ் எந்த வருஷம் துவங்கப்பட்டது ?"
இப்போ இந்த வரலாறு ரொம்ப முக்கியம்.
1955ஆ ,56ஆ ? யோசிக்கலாம்னு யோசிச்சா ஒரு வேள 57ஆ இருக்குமோனு புது குழப்பம்.
வேண்டாம் ராசா .வேணாம்.
இந்த கேள்விக்கு பதில் எழுதவே வேணாம்னு முடிவு செய்யுறப்போ, ஆளாளுக்கு அவங்க பேர சத்தமா கத்திகிட்டு இருந்தாங்க.என்னாடா இவிங்க எல்லாம் லூசாகிட்டானுங்களானு நினைசிக்கிட்டே அடுத்த கேள்விக்கு போனேன்.
15 நொடி தான் மீதி.


"இருக்கையை விட்டு எழுந்து, உங்கள் பெயரை சத்தமாக சொல்லவும்?"
ஓ இதுக்கு தான் சட்டசப மாதிரி ஆளாளுக்கு பேர கத்திகிட்டு இருந்தானுங்களா.


அடுத்து 8 வது கேள்வி..
படிச்சதும்.....புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.
ஒவ்வொருத்தரும் மூஞ்சிய மூஞ்சிய பாத்துகிட்டோம்.
சிரிப்பு வருது ஆனா சிரிக்க முடியாத நிலை.
யாரும் எதிர்பாராத அந்த விசித்திர வரி :-
"மேலே உள்ள 7 கேள்விக்கும் பதில் எழுத கூடாது.9 மற்றும் 10வது கேள்விக்கு மட்டும் பதில் அளிக்கவும்"


அதாவது ரெண்டே 2 கேள்விக்கு மட்டும் பதில் கொடுத்தா போதுமாம்.
உலகத்த சுத்தாம, அம்மா அப்பாவ மட்டும் சுத்தி, பழத்த லவுட்டுன பிள்ளையார் மாதிரி, இது வாச்சாங்கோலி ஆட்டமாயில்ல இருக்கு.
பயிற்சியாளர் சொன்னார்,"கொடுத்த instructionஐ ஒழுங்கா படிச்சீங்களா ? You must read all statements before starting.விடை எழுத ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி 10 statementகளையும் ஒரு முறை படிச்சியிருந்தீங்கன்னா,வெறும் 9,10வது கேள்விக்கு மட்டும் பதில் எழுதியிருப்பீங்க. உங்க எல்லாருக்கும் அவசரம்"


5.5 வருஷம் பட்டப்படிப்பு படிச்சிட்டு, 'தென்கிழக்கு ஆசியாவுலேயே சிறந்தது'னு சொல்லிக்குற பல்கலைக்கழகத்துல 3 வருஷம் பட்டமேற்படிப்பு படிச்ச "அறிவாளி"களோட திறம, ஒரே ஒரு கேள்வியுல வெளுத்துடுச்சு. எங்கள மாதிரி ஆளுங்கள நம்பி தான் வருங்கால மாணவர் சமூகம் இருக்குதுங்குறத நினச்சா தான் பாவமா இருக்கு.


பயிற்சி முடிஞ்சு வெளிய வந்ததும் அடக்குன சிரிப்பு மொத்தமா கொட்டிட்டோம். அதுலயும் ஒருத்தன் அவன் பேர கத்துனானே.. யப்பா... என்னமோ கல்யாணத்துல 1000 ரூபா மொய் வெக்குறவன் மாதிரி வகுப்பே அதிர்ந்துச்சு.


பல்பு வாங்கினாலும், இன்னைக்கு ஒரு நல்ல பாடம் கத்துகிட்டோம்.
"விடை எழுதுறதுக்கு முன்னாடி முதல்ல கொடுக்கப்பட்டிருக்கும் instructionகளை முழுசா படிக்கணும்"


பாலாஜி.