இமயமலை பயணம்






இமயமலைக்கு போய் ஞானம் வாங்கி வருவாங்க. நான் குழப்பத்த வாங்கி வந்திருக்கேன்.

கங்கையில river rafting செய்ய 8 நண்பர்கள் நேற்று முன் தினம் கிளம்பினோம்.நக்கல் கேலி கிண்டல்னு ஜாலியா கார்ல உத்திராகண்டக்கு பயணிச்சோம். ரிஷிகேஷுக்கு போய் இமயமலையேறி ஷிவ்புரிங்குற மலைப்பகுதியில ராத்திரி டெண்ட்டுல தங்குனோம். திடீர் மழை. மின்சாரம் இல்ல. செல்போன்ல சார்ஜ் இல்ல.உலகத்துலயிருந்து பிரிஞ்சாச்சு.நாங்களும் இயற்கையும் மட்டும். நேற்று காலையில எதிர்பாராத அதிர்ச்சி செய்தி : "கங்கையில வெள்ளம். அரசாங்கம் எச்சரிக்கை கொடுத்திருக்கு.ஆத்துல இறங்க கூடாது"
ஏமாற்றத்தோட ஊருக்கு கிளம்பினோம்.


# கொட்டுற மழையில ஃபிட்ஸ் வந்த நாய்க்கு முதலுதவி செய்து கொண்டிருந்த தாடி வெச்ச வெளிநாட்டவரை பார்த்ததும், ஆச்சர்யம்.
"ஃபிட்ஸ் நின்னதும் மூளை பாதிப்பால அந்த நாய் அவர கடிக்க நிறைய வாய்ப்பிருக்கு"னு நண்பர்கள எச்சரிச்சிட்டு, தள்ளி நின்னு எதுவும் செய்யத்தெரியாம, குழப்பத்தோட வேடிக்க மட்டுமே பாக்க முடிஞ்சுது.
இந்த ஆபத்தான இந்திய தெருநாய்க்கு வெளிநாட்டு பயணி எதுக்கு உதவணும் ?
அவர் 'சம்பளத்துக்கு வைத்தியம் பார்க்குற வைத்தியர்' கிடையாது.
'உதவி செய்யுறத ஃபோட்டோ எடுத்து அத வெச்சு ஓட்டு பிச்சயெடுக்குற அரசியல்வாதி'யும் கிடையாது.
'ஃபோட்டோவ ஃபேஸ்புக்குல போட்டு லைக்குக்கு அலையுற மனநோயாளி'யும் கிடையாது. சுத்தியிருந்த உலகத்த அவர் கண்டுக்கவேயில்ல.
அப்புறம் எதுக்கு அவர் இதை செய்றார் ?
குழம்ப ஆரம்பிச்சேன்.


# கங்கை கரைக்கு போனேன்.
போலிஸ் தடுப்பு இல்ல.நதியில பயங்கர இறைச்சல். திகிலா இருந்தது.
எப்ப வேணாலும் தண்ணி நம்மை விழுங்கிவிடும். ஆனா கரையோரம் பல சாதுக்கள் கொஞ்சம் கூட சலனமே இல்லாம தகர ஷீட் வீடுகள்ல படுத்திருந்தாங்க. எந்த நேரத்துலையும் மொத்தமும் தண்ணியில மூழ்கிடும். அத தெரிஞ்சே தான் அங்க படுத்திருக்காங்க. நேரமானதால நண்பர்கள் என்னைய அங்கிருந்து கட்டாயப்படுத்தி அழைச்சிட்டு போயிட்டாங்க.
ஆனா யாரும் அந்த சாமியார்கள அழைச்சிட்டு போகல. ஏன் ?
இந்த சாமியார்கள் சாக துணிஞ்சிட்டாங்களா?
உலக வாழ்க்கை போதும்னு முடிவெடுத்து தான் அங்க இருக்காங்களா?
அது தற்கொலை முயற்சியா ? இல்ல, உலகத்துலயிருந்து வெளியேறும் விடுதலை முயற்சியா ?


# ஒரு பெட்டிக்கடைக்கு 4 நடுத்தர வயது ஆண்கள் காரில் வந்திருந்தாங்க. ஏற்கனவே நல்லா குடிச்சிருந்தாங்க. பாட்டில கையில வெச்சிகிட்டு குடிச்சுகிட்டே சந்தோஷத்துல ஆடுனாங்க. "இது டெல்லி ரெஜிஸ்ட்ரேஷன் கார். இந்த போதையில வண்டி ஓட்டுனா மலைய விட்டே இவங்க கீழ இறங்க முடியாது. இவங்க எப்படி டெல்லி போய் சேர்வாங்க ? ச்சான்ஸே இல்லை"னு நண்பர் சொன்னார்.
உண்மைதான். தெரிஞ்சே தான் குடிக்குறாங்க. எதுக்கு?
உயிர் ஆசைய விட மதுபோதை மேல அதிக போதையா?
சாமியாருர்களுக்கு தான் குடும்பம் இல்ல. இவங்கள நம்பி நிறைய சொந்தம் இருப்பாங்களே ?


# தஞ்சாவூர்ல mbbs படிச்ச சமயம். சுனாமி அடிச்சுது. உயிர் தப்பி வந்த நூத்துக்கணக்கானவங்கள எங்க காலேஜ் ஆடிடோரியத்துல தங்க வெச்சிருந்தோம்.அவங்க பெயர்கள நோட்டு போட்டு எழுதி வெச்சிருந்தோம். செல்ஃபோன் வசதி கிடையாது. சொந்தங்கள தேடி நிறைய பேர் வருவாங்க. தேடிவந்தவங்களோட பெயர் இல்லைனா அழுதுகிட்டே அடுத்த எடத்துக்கு தேடப்போயிடுவாங்க.
தட்டு, பாய், போர்வைனு தஞ்சைவாசிகள் நிறைய பேர் நாங்க கேக்காமலேயே தானம் பண்ணாங்க. லட்சாதிபதி, கோடீஸ்வரர்கள் பல பேர் ,எல்லா சொத்தையும் இழந்து அடுத்த வேள சாப்பாட்டுக்கே வழியில்லாம அழுதத பார்த்ததும் , வெக்கத்த விட்டு பசிக்குதுனு கேட்டதும்,வரிசையில நின்னு இலவசமா கொடுக்குற தட்டையும் பாயையும் அழுதுகிட்டே வாக்குனத பார்த்ததும் , சுனாமியில சிக்காத என்னையும் என் வாழ்க்கையும் சுத்தமா திருப்பி போட்டுச்சு. "ச்ச... வெறும் பணம்"குற எண்ணம் உருவானது அப்ப தான்.

3 நாள் கழிச்சு நாகப்பட்டினம், பூம்புகார் பகுதியில கல்லூரி சார்பா medical camp நடத்த போனோம். பெரிய பெரிய படகெல்லாம் ஊருக்குள்ள ரொம்ப தூரம் இழுத்து வந்து போட்டிருக்கு சுனாமி. அலையவே பாக்கல..ஆனா தெருவுல ராட்ஷச படுகுங்க தலைகீழா கிடந்தத பாத்ததும் பயம் தொத்திகிச்சு. .இயற்க மேல முதல் முறையா பயம் வந்தது அப்ப தான்.

சுனாமி- எதுவும் தெரியாத கடலோர கிராம மக்கள் ஆயிரக்கணக்கானவங்கள தண்ணி இழுத்துகிட்டு போச்சு. கொத்து கொத்தா அடக்கம் செஞ்சாங்க. கடவுள மேல நம்பிக்கை போக ஆரம்பிச்சது அப்ப தான்.

campல கட்டுகட்டுறது, மருந்து எடுத்து கொடுக்குறதுனு சின்ன சின்ன எடுபிடி வேல செஞ்சேன். அது மட்டுமே தெரிஞ்ச மருத்துவ மாணவன் நான். "திரும்பவும் அல வருது" "அல வருது.ஓடுங்க" னு கிளம்புன புரளிய கேட்டதும், உயிர் பயத்துல எல்லாரும் ஓடுனோம். கடவுள வேண்டுறதுக்கே நேரமில்ல.

நேத்து பாலத்துக்கு மேல நின்னு கீழயிருந்த கங்கைய பார்த்தேன். வெள்ளத்த பார்த்ததும் அதே பயம். பெரிய பெரிய மரங்கள் வேரோட வேகமா அடிச்சுகிட்டு போனது. பிரம்பு ச்சேர்கள் , வீட்டுக்கூரைகள் அதுல மிதந்து வந்துச்சு. இயற்கை மேல பயம். எத்தன பேர் இறந்தாங்களோ ?
பக்கத்துலயிருந்த பிரசித்தி பெற்ற கோயிலுக்கு நண்பர்கள் போனாங்க. எனக்கு போக மனசில்ல. பாலத்துல நின்னு ஃபோட்டோ எடுத்துகிட்டேன்.
சாமி இருக்குற எடத்துல எதுக்கு வெள்ளம் வரணும் மக்கள் சாகணும் ?


# வழி நெடுக்க பெரிய பெரிய பாறைகள்.மலையிலயிருந்து உருண்டு வந்திருக்கு. முதல் நாள் சந்தோஷமா பாட்டு கேட்டுகிட்டு போன சாலையில , அடுத்த நாள் பாறைகள் இருந்தா என்ன தோணும் ? பயம். அதுவும் சில மணி நேரம் முன்னாடி தான் பாறைகள் விழுந்திருக்குனு கேள்விப்பட்டதும் திகில். கார்ல விழுந்திருந்தா உயிர் தப்ப வாய்ப்பேயில்ல . ஜஸ்ட் எஸ்கேப்.

ஜூனியர்கள் சிகரெட் பிடிச்சாலோ குடிச்சாலோ திட்டுவேன். பக்கம் பக்கமா அட்வைஸ் செய்வேன். எனக்கு நேரா குடிக்கவே சங்கடப்படுவாங்க. ஆனா நேத்து திரும்பி வரப்போ, 3 பேர் கொட்டுற மழையில தலையில துண்டு போட்டுகிட்டு நின்னு, ஒரே சிகரெட்ட மாறி மாறி இழுத்து புகை விட்டுகிட்டிருந்தாங்க.எனக்கு கோவமே வரல. "போகட்டும்.சந்தோஷமா இருக்கட்டும்"னு மருத்துவருக்கு வரக்கூடாத சிந்தனை . அவங்கள ஒன்னுமே சொல்லல.
நான் கொஞ்சம் மாறிவிட்டேன்.


# ரிஷிகேஷ்- ஹரித்வார் சாலையில் traffic jam. 20 கிமீ தூரத்துக்கு பேருந்துகளும் கார்களும் வரிசையா நிக்குது..
எதனால ? நிலச்சரிவு தான் காரணமா ? இல்லவே இல்ல.
சின்ன மலைப்பாதையில ஒருத்தர ஒருத்தர் முந்த முயற்சி செஞ்சதால, ஒரு வழிசாலையில தெரிஞ்சே எதிர் திசையில தப்பா வந்ததால, "தான்"குற திமிர் பிடித்த கார் ஓட்டிகளால தான் இந்த பிரச்சனையே.பயணிகள் சிலரே போக்குவரத்த ஒழுங்கு படுத்த ஆரம்பிச்சாங்க. ஆனா ஒவ்வொரு வாகன ஓட்டிக்கும் 'முதல்ல நான் தான் செல்ல வேண்டும்'னு சுயநலம். வழி விட மனமில்ல. ரிவர்ஸ்ல எடுக்க மாட்டேன்னு ஈகோ. யாராலையும் எதுவும் செய்ய முடியல. நிறைய பேர் சண்ட போட ஆரம்பிச்சாங்க.வாக்குவாதம் முத்தி அடிதடி.கண்ணாடி உடைப்பு. 30 கிமீ தூரத்த கார்ல கடக்க 12 மணி நேரம் ஆனது.


சாலையில விழுந்து கிடந்த பெரிய பாறைகள பார்த்ததுக்கப்புறமும் மக்களிடம் இந்த பிடிவாதம் இருக்குமானால், கங்கை வெள்ளத்துல அடிச்சுகிட்டு போன வீடுகள பாத்துக்கப்புறமும் இந்த ஈகோ இருக்குமானால், அதுவும் படிச்சவர்களிடம் இவ்வுளவு சுயநலம், முட்டாள் தனம் இருக்குமானால், குடித்தால் விபத்து நிச்சயம்னு தெரிஞ்சே குடிப்பார்களேயானால், இந்த உலகத்துல ஏதோ ஒரு தீர்க்க முடியாத பெரிய பிரச்சனை இருக்கு. அதுல இருந்து தப்பிக்க தான் இந்த சாதுக்கள் சாக விரும்புறாங்களா ?


650 கி.மீ பயணம்.
கொஞ்சம் தெளிவு கிடச்சிருக்கு.
ஆனா நிறைய குழப்பம் வந்திருச்சு..


- பாலாஜி